மிரட்டலான வேகம்! டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் பண்ணுங்க – இளம் வீரருக்கு குவியும் ஆதரவு

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 162/7 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (9) ரன்களில் அவுட்டாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 11 (9) மேத்தியூ வேட் 19 (19) போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் சொதப்பினர்.

அந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் 42 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 50* ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் அபினவ் மனோகர் 35 (21) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி:
அதை தொடர்ந்து 163 என்ற இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த இந்த ஜோடியில் 32 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்தபோது அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்து அதிரடியாக பேட்டிங் செய்த ராகுல் திரிப்பாதி 17 (11) ரன்கள் எடுத்திருந்தபோது காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34* ரன்களும் ஐடன் மார்க்ரம் மார்க்ரம் 12* (8) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுக்க 19.1 ஓவரில் 168/2 ரன்களை எடுத்த ஹைதெராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 57 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய வில்லியம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளுடன் 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் 2-வது வெற்றியை பதிவு செய்து வெற்றி நடை போட துவங்கியுள்ளது.

- Advertisement -

மிரட்டல் வேகம் உம்ரான் மாலிக்:
முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய இளம் வீரர் உம்ரான் மாலிக் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். இந்த வருடம் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக 145 – 150 கிலோமீட்டர் வேகங்களில் பந்துவீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராக திகழ்ந்து வருகிறார்.

அதிலும் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன் போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை விட வேகத்தில் மிரட்டும் இவர் ஒவ்வொரு பந்தையும் குறைந்தது 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியில் 153.3 கிலோ மீட்டருக்கும் மேல் வீசிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

டி20 உலககோப்பை வாய்ப்பு:
ஜம்மு காஸ்மீரை சேர்ந்த இவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி இதேபோல அதிரடியான மின்னல்வேக பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் அந்த வருடம் இவரின் பந்தை எதிர்கொண்ட அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி இது போன்ற தரமான பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என பாராட்டியிருந்தார். அந்த வருடம் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்த அவரை இந்தியாவிற்காக விளையாடாத போதிலும் நம்பிய ஹைதராபாத் அணி நிர்வாகம் 4 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு தக்க வைத்தது.

தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை விரைவில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என ஆதரவுகள் பெருகி வருகின்றன. அதிலும் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே வேகம் மற்றும் பவுன்ஸ் போன்றவைகளுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும் என்பதால் கண்டிப்பாக இவரால் அங்கு சாதிக்க முடியும் என நட்சத்திர தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே நேற்றைய போட்டிக்குப் பின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதேபோல் உம்ரான் மாலிக் விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் தாம் பிசிசிஐயில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவரை இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடருக்கு அனுப்பி அவரின் திறமையை மேலும் பட்டை தீட்டுவேன் என்று பாராட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : ப்ளே ஆஃப் சுற்று, பைனல் எங்கே நடைபெறுகிறது – வெளியான புதிய அறிவிப்பு இதோ

இப்படி அடுத்தடுத்து பாராட்டுகளைப் பெற்று வரும் உம்ரான் தற்போதைய நிலைமையில் வேகத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ரன்களை வழங்கி வருகிறார். எனவே வேகத்திற்கு ஈடாக லைன் மற்றும் லென்த் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தாமாகவே அவருக்கு கிடைக்கும்.

Advertisement