ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இம்முறை 10 அணிகள் பங்கேற்பதால் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் பிசிசிஐ தயார் செய்து வருகிறது.

வர்ணனையாளராக கழற்றிவிடப்பட்ட ரெய்னா:
இந்த தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மிகுந்த தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் இந்த வருடமும் அபாரமாக செயல்பட்டு 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடுமையான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை அணிக்காக காலம் காலமாக விளையாடி பல சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றிய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை அந்த அணி நிர்வாகம் இம்முறை வாங்காதது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த அணியில் கேப்டன் தோனிக்கு பின் முக்கிய முதுகெலும்பு வீரராக வலம் வந்த அவரை “சின்னத்தல” என சென்னை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் சமீப காலங்களாக ரன் அடிக்க முடியாமல் பார்மின்றி தவித்து வரும் அவரை அந்த அணி நிர்வாகம் கழட்டி விட்டது சென்னை ரசிகர்களையே கோபமடைய வைத்தது. இருப்பினும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாத சுரேஷ் ரெய்னா நிதர்சனத்தை புரிந்து கொண்டு ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

சென்னை பற்றி ரெய்னா:
இதனால் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் புதிய அவதாரத்தில் கால்தடம் பதிக்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில் காலம் காலமாக ஆற்றிய பங்கையும் நன்றியையும் மறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி சுரேஷ் ரெய்னா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.
“ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் ட்வயன் பிராவோ ஆகியோர் சென்னை அணியை வழி நடத்தக் கூடியவர்கள். போட்டியை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள அவர்கள் சென்னையை வழிநடத்தும் தகுதியைப் பெற்றுள்ளனர். எனவே இவர்கள் கேப்டன் எம்எஸ் தோனியின் வாரிசு கேப்டன்களாக இருப்பார்கள்” என கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ் தோனி இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அந்த அணியின் இதயமாக கருதப்படும் அவர் தற்போது 40 வயதை கடந்து விட்டதால் இனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். எனவே அவருக்கு அடுத்தபடியாக அந்த அணிக்கு கேப்டனாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு போன்ற மூத்த வீரர்கள் சரியானவர்களாக இருப்பார்கள் என சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வர்ணனையாளராக அவதாரம்:
இதுநாள் வரை கிரிக்கெட் களத்தில் எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடி ரன்களை எடுத்து வந்த அவர் தற்போது முதல் முறையாக ஒரு வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அவருடன் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் மகத்தான வர்ணனையாளர் ரவி சாஸ்திரியும் இந்த வருடம் முதல் மீண்டும் வர்ணனை செய்ய உள்ளார். இதற்கு முன் இது போன்ற வர்ணனை செய்யும் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் ரெய்னாவுக்கு சுத்தமாக கிடையாது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 : இந்தாண்டிற்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய சென்னை நிர்வாகம் – எப்படி இருக்கு சொல்லுங்க
அப்படிப்பட்ட நிலையில் ஒரு வர்ணனையாளராக முதல் முறையாக செயல்பட உள்ளது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்காக நான் தயாராக உள்ளேன். இர்பான் பதான், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா போன்ற எனது சில நண்பர்கள் ஏற்கனவே வர்ணனை செய்து வருகிறார்கள். அத்துடன் ரவி சாஸ்திரியும் உள்ளார். எனவே எனக்கு இந்த வேலை எளிதாக இருக்கும். அவர்களிடம் இருந்து ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக் கொள்வேன்” என கூறினார்.



