தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியானது தற்போது அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை அவர்களை மண்ணில் வீழ்த்துவது கடினம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி சவுத்ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தமீம் இக்பால் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்ஆப்பிரிக்க அணியின் முதல் நான்கு வீரர்கள் யாரும் சரிவர ஆடாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிடில் ஆர்டரில் வேண்டர்டுஷன் 86 ரன்களையும், மில்லர் 79 ரன்களையும் குவித்தனர் ஆனாலும் கூட இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் காரணமாக பங்களாதேஷ் அணி இந்த முதல் ஒருநாள் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியை அவர்களது மண்ணில் வீழ்த்துவது கடினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் கூட தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்திருந்தது. இப்படி ஒரு வேளையில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டியை பங்களாதேஷ் அணி ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது. ஆனாலும் தங்களது கடின உழைப்பும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி முதலாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க : கத்துக்குட்டியை அடிச்சா போதுமா ! அவங்களோட மோதி நிரூபிங்க – ரோஹித்துக்கு சவால் விடுத்த பிராட் ஹாக்
பங்காளதேஷ் அணியின் இந்த வெற்றி தற்போது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் இந்த தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க புறப்படுவதற்கு முன் இந்தியாவாலே அங்கு ஜெயிக்க முடியவில்லை நாங்கள் எப்படி ஜெயிக்கப்போகிறோம் என்று ஷாகிப் அல் ஹசன் கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்தி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த ஒரு முக்கிய காரணமாகத் திகந்தது குறிப்பிடத்தக்கது.



