ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவிலேயே நடைபெறும் இந்தத் தொடரில் முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட சுற்றுக்கான முழு அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

கோப்பையை தக்க வைக்குமா சிஎஸ்கே:
இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராக துவங்கியுள்ளன. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த தொடர் துவங்கும் மும்பை நகரில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையை தக்க வைப்பதற்காக மும்பை, பெங்களூரு போன்ற இதர அணிகளை காட்டிலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர வலை பயிற்சியை தொடங்கியது.
அதில் கேப்டன் எம்எஸ் தோனி, ராபின் உத்தப்பா போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ருதுராஜ் கைக்வாட், ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வீரர்களும் இணைந்து வருகிறார்கள். இதனால் ஐபிஎல் 2022 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

காலம் கடந்த வீரர்கள்:
இந்நிலையில் காலம் கடந்த வீரர்களை வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பது சந்தேகம் என முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் வெறும் ஒரு கேள்வியில் தான் உள்ளது. அதாவது எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற சென்னை அணியின் முக்கிய வீரர்கள் சமீப காலங்களில் எத்தனை போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள்? மேலும் அவர்கள் தற்போது எந்த அளவிலான பார்மில் உள்ளார்கள்” என கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுவது போல சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவிற்காக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை விளையாடினார். அதன்பின் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் நிலையில் கடைசியாக கடந்த ஐபிஎல் 2021 தொடரின் பைனலில் விளையாடினார். ஏற்கனவே கடந்த சில வருடங்களாக மோசமான பார்மில் இருந்து வரும் அவர் அதன்பின் சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை.

அவரை போலவே சென்னையின் முக்கிய வீரர்களாக இருக்கும் அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் கடந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு பின் வெறும் ஒரு சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்கள்.பொதுவாகவே தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கூட சில நேரங்களில் பெரிய ரன்களை அடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் சென்னை அணியின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக கருதப்படும் இவர்கள் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் சுமாரான பார்மில் இருப்பதால் சென்னை அணி கோப்பையை தக்க வைப்பது மிகவும் கடினம் என இர்பான் பதான் கூறியுள்ளார்.

சாதிக்குமா டாடி ஆர்மி:
இது மட்டுமல்லாமல் இதற்கு முன் பெரிய அளவில் சோபிக்காமல் நல்ல பார்மில் இல்லாத இந்திய ஆல் ரவுண்டர் சிவம் துபேவை சென்னை அணி நிர்வாகம் 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுபற்றி இர்பான் பதான் கூறியது பின்வருமாறு. “ஷிவம் துபே போன்ற ஆல்ரவுண்டர் எந்த அளவுக்கு செயல்படுகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது” என கூறினார்.
இருப்பினும் இதுபோன்ற சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் கடந்த 2018 முதல் பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த 35 வயதிற்கு மேலான வீரர்களை கொண்ட அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதர அணி ரசிகர்கள் டாடி ஆர்மி, அன்கில்ஸ் ஆர்மி என கிண்டலடித்தார்கள். ஆனால் அதே அனுபவம் வாய்ந்த வயதான வீரர்களை வைத்துக்கொண்டு அசத்திய அந்த அணி 2018 மற்றும் 2021 கோப்பைகளை வென்று கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா இப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க இதுவே காரணம் – ஜாஹீர் கான் கொடுத்த விளக்கம்
மறுபுறம் சென்னை அணியை “டாடி ஆர்மி” என கிண்டல் அடித்தவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் தவித்தனர். எனவே அதே போல இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைக்கும் என அந்த அணி ரசிகர்கள் நம்புகிறார்கள்.



