ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ஷேன் வார்ன் தனது 52-வது வயதில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஷேன் வார்ன் மறைந்தார் என்ற செய்தி இணையத்தில் சில நிமிடங்களில் வைரலாகவே உலகெங்கிலும் இருந்து அவருக்கு இரங்கல் அனுதாபங்கள் குவிந்து வருகின்றன. அதோடு ஷேன் வார்ன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்த முன்னாள் வீரர்கள் பலரும் அவருடன் தங்களுக்கு இணைந்த பிணைப்பு குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருன்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங், கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்கள் அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளனர். அதோடு ஷேன் வார்ன் உடனான நட்பு குறித்தும் தங்களது உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் ஷேன் வார்ன் தாய்லாந்து நாட்டில் உள்ள தனது சொகுசு பங்களாவில் இறப்பதற்கு முன்னதாக அவரது டுவிட்டர் வாயிலாக பகிர்ந்த கடைசி ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி தான் இறப்பதற்கு சரியாக ஒரு 12 மணி நேரத்திற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரோட் மார்ஷ் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் வாயிலாக ஒரு இரங்கல் பதிவினையும் பகிர்ந்துள்ளார். அதில் ராட் மார்ஷ் நம்மை விட்டு சென்றதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த வீரர்.
பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பதிவிட்ட வார்ன் அடுத்த சில மணி நேரங்களிலேயே மரணத்தை சந்தித்து உள்ளதால் அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இறப்பிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மிஸ் யூ லெஜண்ட் : கிரிக்கெட்டில் ஷேன் வார்னே படைத்துள்ள மகத்தான சாதனைகளின் – பட்டியல் இதோ
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி 2007 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ள ஷேன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



