குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடியிருந்த ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றடைந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
குஜராத் அணியை வீழ்த்தியதற்கு பிறகு : ரஜத் பட்டிதார் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவிக்க பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 162 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 92 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : உண்மையிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. அதிலும் குறிப்பாக எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். களத்திற்கு வந்த அனைத்து பேட்ஸ்மன்களுமே இன்டென்ட்டுடன் விளையாடியது நன்றாக அமைந்தது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நல்ல மனநிலையுடன் அதிரடியாக விளையாட வேண்டும் என்று மட்டுமே மீட்டிங்கில் பேசியிருந்தோம். அந்த வகையில் நல்ல உடல் மொழியுடன் இந்த போட்டியில் விளையாடியதாக உணர்கிறேன். அதோடு நான் தனிப்பட்ட வகையில் 8 முதல் 10 பந்துகளை சந்தித்து மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? என்பதை கணித்த பின்னரே அதிரடியாக விளையாடத் துவங்கினேன்.
இதையும் படிங்க : வரலாற்று சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு சென்றடைந்த ஆர்.சி.பி அணி – விவரம் இதோ
பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களுக்கு உள்ளாக குஜராத் அணியின் டாப் 3 வீரர்களை வீழ்த்தி விட்டால் போட்டி எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த வகையிலே எங்களது திட்டம் அனைத்தும் சரியாக நடந்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்று ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.



