சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சி.எஸ்.கே அணிக்கெதிராக சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 44 ரன்களையும், கார்த்திக் சர்மா 32 ரன்களையும் குவித்தனர். சன்ரைசர்ஸ் சனி சார்பாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 72 ரன்களையும், கிளாஸன் 47 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் சன் ரைசர்ஸ் அணியானது கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது வெற்றியை பதிவு செய்ததோடு மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளது. அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை நாங்க வீழ்த்த முக்கிய காரணம் இதுதான் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி
அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை சன் ரைசர்ஸ் அணி ஒரு சீசனில் கூட இரண்டு முறை சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது கிடையாது. ஆனால் இந்த 2026-ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் அவர்களை வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



