இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்ப்பார்கள். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தங்களை உலகிற்கு காண்பித்த வேளையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது லக்னோ அணி சார்பாக விளையாடிய முகுல் சவுத்ரி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரே இரவில் ஹீரோவாக மாறியுள்ளார்.
யார் இந்த 21 வயதான முகுல் சவுத்ரி :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது 181 ரன்கள் குவிக்க பின்னர் அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 182 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தியது. அப்போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே குவித்திருந்த வேளையில் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு கடினமாக மாறியது.
அவ்வேளையில் ஏழாவது வீரராக களமிறங்கிய முகுல் சவுத்ரி 27 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகுல் சவுத்ரி கடந்த 2004 ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிறந்தார். வலதுகை பேட்ஸ்மேனான அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் மிதவேக பந்துவீச்சாளராக துவங்கிய தனது பயணத்தை தற்போது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக பின் வரிசையில் களமிறங்கும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை முடித்து கொடுக்கும் ஒரு பினிஷராக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் போது அவரது அடிப்படை விலை 30 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட வேளையில் இவரது அதிரடியை கணக்கில் கொண்டு பல்வேறு அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டது. இந்த ஏலத்தின் முடிவில் 28 முறை ஏலம் கேட்கப்பட்ட அவர் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் என்கிற தொகைக்கு லக்னோ அணியால் வழங்கப்பட்டார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அவருக்கான வாய்ப்பை லக்னோ அணி வழங்கி வந்த வேளையில் நேற்று அவர் விளையாடிய மூன்றாவது போட்டியில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : நெட்ஸ்ல பாத்தத விட இப்போ மேட்ச்ல பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு – வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் பாராட்டு
சையத் முஷ்டாக் அலி தொடரில் 165 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆண்டு பினிஷர் ரோலில் லக்னோ அணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 21 வயதாகும் இவர் பினிஷராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவருக்கு பிரகாசமாக எதிர்காலம் உள்ளது என்று பலரும் அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



