கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது ஆட்டத்தில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முகுல் சவுத்ரியை பாராட்டிய ரிஷப் பண்ட் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரகுவன்சி 45 ரன்களையும், ரஹானே 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.
லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக முகுல் சவுத்ரி 27 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : முகுல் சவுத்ரியை வலைப்பயிற்சியின் பார்க்கும்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடுவதை உணர்ந்தோம்.
தற்போது மேட்சில் அவர் விளையாடிய விதம் உண்மையில் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவருடைய இன்னிங்சை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒரே ஆளாக எங்களுக்கு போட்டியை வென்று கொடுத்துள்ளார். இந்த போட்டியில் நிச்சயம் எங்களது அணியின் வீரர்களால் இந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
இதையும் படிங்க : 18 ஓவர் வரை ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த – கேப்டன் ரஹானே
அதோடு நிர்வாகமும் வீரர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவே தற்போது வீரர்களும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இனிவரும் போட்டியிலும் அவரது ஆட்டம் இன்னும் அதிரடியாக இருக்கும் என்று நம்புகிறேன். தனிப்பட்ட வகையில் எங்களுடைய அணி வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை இனிவரும் போட்டிகளில் வெளிப்படுத்துவார்கள் என்றும் தான் நம்புவதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



