மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது பெரும்பாலான ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயராகவே விளையாடியிருந்தார். அதன் காரணமாக கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இம்முறை 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தனது உடற்தகுதியில் தீவிர கவனம் செலுத்திய ரோகித் சர்மா கணிசமாக உடல் எடையை குறைத்து முன்பை விட பிட்டாக தனது உடலமைப்பை மாற்றி மிகவும் இளமையான தோற்றத்துடன் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை பாராட்டிய : ஹார்டிக் பாண்டியா
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் இந்த போட்டியின் போது இம்பேக்ட் பிளேயராக விளையாடியிருந்தார். அப்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 220 ரன்களை குவித்தது.
பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இந்த இலக்கினை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 38 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 205 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 78 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்ப்பது என்பது நமக்கு ஒரு ட்ரீட் போன்றது.
இதையும் படிங்க : சவால்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவே என் அசத்தலான பந்துவீச்சுக்கு காரணம் – ஆட்டநாயகன் ஷர்துல் பேட்டி
ஏனெனில் நிறைய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஷாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால் எப்பொழுதுமே ரோகித் சர்மா வந்து ஒரு சில ஷாட்டுகளை விளையாடும் போது அது எல்லோருடைய வாயையும் பிளந்து பார்க்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை ரோகித் சர்மா விளையாடி இருந்தார். இப்படி ஒரு ஆட்டத்தை ரோகித் சர்மாவிடம் இருந்து நான் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



