இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்றது. இருப்பினும் அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடினார். முதல் போட்டியில் 93 ரன்கள் அடித்த அவர் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
3வது போட்டியில் 338 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 77/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு நங்கூரமாக விளையாடிய விராட் கோலி சதத்தை அடித்து 124 ரன்கள் குவித்து போராடினார். இருப்பினும் எதிர்ப்புறம் நிதிஷ் ரெட்டி 53, ஹர்ஷித் ராணா 52 ரன்கள் அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் இந்தியா தோற்றது.
சந்தையில் கிடைக்காது:
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்காக விராட் கோலி அடுத்ததாக வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் விளையாட உள்ளார். அதற்கிடையே ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள அவர் தன்னை ஃபார்மில் வைத்துக் கொள்வதற்காக உள்ளூரில் விளையாட வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த தென்னாப்பிரிக்க தொடருக்குப்பின் அவர் விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லிக்காக விளையாடியதை சொல்லலாம்.
இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடாத சமயங்களில் லண்டனுக்கு செல்லும் விராட் கோலியிடம் மார்க்கெட்டில் கிடைக்காத ஆர்வம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதனாலேயே சமீப வருடங்களாகவே லண்டனில் இருந்து விட்டு வந்தாலும் அவரால் தொடர்ந்து இந்தியாவுக்காக அசத்த முடிவதாகவும் கைஃப் பாராட்டியுள்ளார். எனவே இனிமேல் விராட் கோலி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கைஃப் பாராட்டு:
“தற்போது விராட் கோலி எப்போதாவது மட்டுமே பார்க்கப்படும் வீரராக மாறிவிட்டார். இங்கே வரும் அவர் ரன்கள் அடித்து விட்டு மீண்டும் லண்டனுக்கு திரும்பி செல்கிறார். அவர் இந்தியா வருகிறார் ஸ்கோர் செய்கிறார். பொதுவாக நீங்கள் தொடர்ச்சியாக விளையாடாத போது இவ்வளவு சீராக ஸ்கோர் செய்வது எளிதல்ல. ஆனால் அதுவே விராட் கோலியின் ஆர்வம், ஃபிட்னஸ், நாட்டுக்காக விளையாடும் பெருமை, தன்னுடைய விளையாட்டு பற்றிய அறிவு”
இதையும் படிங்க: அடிப்பதற்குள் விடிஞ்சுரும் போலயே.. சிட்னி காலை வாரிய பாபர் அசாம்.. அம்பயரை விளாசும் பாக் ரசிகர்கள்
“அதை அவர் நிரூபிக்கிறார். தற்போது அவர் உள்ளூரில் விளையாடுவதற்கான அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டி பயிற்சியைப் பெறலாம். ஆனால் விராட் கோலியிடம் இருக்கும் ஆர்வம் எந்த சந்தையிலும் கிடைக்காது. எங்கிருந்து அதை நீங்கள் பெறுவீர்கள்? கடைசி போட்டியிலும் விராட் விளையாடும் வரை வெற்றிக்கான நம்பிக்கை இருந்தது. தமக்கு முன்னே இருக்கும் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி தனியாளாக வெல்லும் திறமை அவரிடம் இருக்கிறது” என்று கூறினார்.



