நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா முதல் முறையாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பெரும்பாலான வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
குறிப்பாக பந்து வீச்சு துறையில் கடைசி 2 போட்டிகளிலும் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்கத் திண்டாடியது தோல்விக்கு வித்திட்டது. அதிலும் குறிப்பாக அதிக அனுபவத்தைக் கொண்ட ரவீந்திர ஜடேஜா மிடில் ஓவர்களில் மோசமாக பந்து வீசியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அதே போல பேட்டிங் துறையிலும் சுமாராக விளையாடிய அவர் தாக்கத்தை ஏற்படுத்தாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
சுமாரான ஜடேஜா:
இந்நிலையில் காலத்திற்கு தகுந்தார் போல் மாறியுள்ள ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இன்னும் பழைய முறையில் பவுலிங் செய்வதாக அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். எனவே ஒரே மாதிரியாக பந்து வீசாமல் நிறைய வேரியசன்களை கற்றுக் கொள்ளுமாறு அவர் ஜடேஜாவை அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் அக்சர் பட்டேல் அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் ரஹானே இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களிடம் கண்டிப்பாக வேரியேசன்கள் இருக்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா பல்வேறு சூழ்நிலைகளில் தனது திறமையை நிரூபித்த வீரர். இருப்பினும் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துகளை வீசும் போது அவருடைய பவுலிங் கணிக்கப்படுகிறது. உள்வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரை வைத்துக்கொண்டு நீங்கள் ஒரே மாதிரியான வேகத்தை கடைபிடித்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடுவார்கள்”
அக்சர் பட்டேல் ரெடியா இருக்காரு:
“மறுபுறம் வேரியேசன்களை கொண்ட அக்சர் பட்டேல் வெள்ளைக்கோட்டை வைத்து கோணத்தை நன்றாக பயன்படுத்தி வேகத்தை மாற்றி பந்து வீசுகிறார். எனவே அணியில் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. அதனால் ஜடேஜா தன்னுடைய ஆட்டத்தை உணர்ந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். ஜடேஜா பந்து வீச்சில் தன்னுடைய ஆட்டத்தை எளிதாக வைத்திருக்க விரும்புகிறார்”
இதையும் படிங்க: பாவம்யா விராட் கோலி.. 2023இல் சைலன்ட்டா அசத்திய ஜடேஜாவிடம் அந்த ஆர்வம் இல்லை.. விளாசிய ஸ்ரீகாந்த்
“ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நீங்கள் பரிணமிக்க வேண்டும். சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜடேஜாவின் ஆட்டம் ஆபத்தானதாக இருக்கிறது. ஆனால் ஃபிளாட்டான ஆடுகளங்களில் அவர் தன்னை மாற்றிக்கொண்டு மாறுபட்ட திட்டங்களை வகுத்து கோணங்களை இன்னும் நன்றாக பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.



