இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.
முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு கட்டத்தில் இந்திய அணிக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடினார். குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2023 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட தனியாளாக இலங்கையை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே வருடம் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையிலும் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் இப்போதும் டெஸ்ட் அணியில் முதன்மை பவுலராக வலம் வருகிறார்.
பரவால்ல இந்தியா ஜெய்க்கனும்:
இருப்பினும் இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடி இந்தியாவுக்காக சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் காரணமாக இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி தரமாக இருப்பதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். எனவே 2024இல் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற தமக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால் பரவாயில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இம்முறை மீண்டும் இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டுமென்று சிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்திய சிராஜ்:
இது பற்றி 3வது நியூஸிலாந்து ஒருநாள் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த டி20 உலகக் கோப்பையில் நான் விளையாடினேன். ஆனால் இம்முறை இல்லை. ஒரு வீரருக்கு உலகக் கோப்பையில் விளையாடுவது கனவாக இருக்கும். அதுவும் உலகக் கோப்பையில் நாட்டுக்காக விளையாடுவது இன்னும் சிறந்ததாக இருக்கும்”
இதையும் படிங்க: வெறும் 40 ரன்ஸ் அடிக்க முடியல.. 232 வருட உலக சாதனையை உடைத்த பாகிஸ்தான் உள்ளூர் அணி
“அப்படிப்பட்ட நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணி பார்ப்பதற்கு நன்றாக தெரிகிறது. அது நல்ல ஃபார்மிலும் இருக்கிறது. எனவே அவர்களுக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள். கோப்பையை மீண்டும் வென்று நம்முடைய நாட்டிலேயே வைத்திருங்கள்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



