இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 27000+ ரன்கள் 84 சதங்கள் அடித்துள்ள அவர் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதே போல கேப்டனாக அவருடைய தலைமையில் முதல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.
2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் நம்பர் ஒன் அணியாக ஜொலித்த இந்தியாவின் கேப்டனாக விராட் கோலி 40 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசிய மற்றும் இந்திய கேப்டன் ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்.
24 கேரட் கோலி:
இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே விராட் கோலியின் திட்டமாகும். ஆனால் அதற்கு முன் அவரை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அதற்காக அசராத விராட் கோலி கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் 2 சதங்கள் விளாசி தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ள அவர் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் 131, 77 ரன்களை விளாசி நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் கடவுள் தமக்கு வாய்ப்பு கொடுத்தால் விராட் கோலியை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பேன் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
சித்துவின் ஆசை:
36 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் விராட் கோலி தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதையில் நடக்க உதவுவார் என்று சித்து தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராம் இல்லாமல் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை கடவுள் எனக்கு ஒரு ஆசையை அருளினால், விராட் கோலியை ஓய்விலிருந்து மீட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வைக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொல்வேன்”
இதையும் படிங்க: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – விவரம் இதோ
“1.5 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டுக்கு அதை விட வேறு எதுவும் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் கொடுக்க முடியாது. அவருடைய ஃபிட்னஸ் 20 வயது இளைஞரின் உடல் தகுதிக்கு ஒப்பானது. அவரே 24 கேரட் தங்கத்தைப் போன்றவர்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தடுமாறிய விராட் கோலி இங்கிலாந்தில் கம்பேக் கொடுக்க தயாரானார். அதற்குள் அவரையும் ரோஹித்தையும் கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்தது. அதனால் அவர்களாகவே அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது



