அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடிய இந்திய அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இந்திய ஒருநாள் அணியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம் :
அந்த வகையில் ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்து இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அப்படி வெளியாகப்போகும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக சுப்மன் கில் தொடர்ச்சியாக நீடிப்பார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை கே.எல் ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் பேக்கப் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் பெரும்பாலும் விளையாடுவது கிடையாது.
கடைசியாக 2024-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் அதன்பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடியது இல்லை அதேபோன்று ஒருநாள் போட்டியில் அவர் பெரியளவு தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இஷான் கிஷன் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி இரட்டை சதம் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : விமர்சனங்களை தாண்டி 2025ஆம் ஆண்டின்.. கில்லியாக உலக சாதனை படைத்த இந்தியா சுப்மன் கில்
அதுமட்டும் இன்றி சமீபத்தில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்களிலும் அவர் அடுத்தடுத்து சதங்களை விளாசி நல்ல பார்மில் இருப்பதால் மீண்டும் அவரை ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கொண்டு வரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சில குறிப்பிட்ட அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுகிறது.



