ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் 2010/11க்குப்பின் ஆஸ்திரேலியாவில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இத்தனைக்கும் இம்முறை பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெல்வோம் என்று பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் சவால் விட்டனர். ஆனால் அதற்குத் தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து வெறும் 11 நாட்களில் தோற்று ஆஷஸ் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் பஸ்பால் என்ற முட்டாள்தனமான அணுகுமுறையை இங்கிலாந்து தூக்கி எறிய வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இங்கிலாந்து 110க்கு அவுட்:
அதற்கு வித்திட்ட பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்தார். அந்த சூழ்நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான இன்று பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்னில் துவங்கியது.
இந்திய நேரப்படி காலை 5.00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவை 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 29, அலெக்ஸ் கேரி 20, மைக்கேல் நிஷர் 35 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
முடிவுரை எழுதும் ஆஸ்திரேலியா:
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து மீண்டும் மோசமாக விளையாடி வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தங்களது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2021 அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சுப்மன் கில் எடுத்துள்ள முடிவு – விவரம் இதோ
ஏற்கனவே பதவி விலக வேண்டும் என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள மெக்கல்லத்துக்கு இது மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இப்போட்டியில் 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்று 0 – 5 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து ஒய்ட்வாஷ் தோல்வியைத் சந்தித்தால் மெக்கல்லம் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது 99% என்றே சொல்லலாம். அதனால் இத்தொடரில் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறைக்கு ஆஸ்திரேலியா முடிவுரை எழுதி வருகிறது என்றால் மிகையாகாது.



