ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டார். ஏற்கனவே 2023இல் அறிமுகமான அவர் சுமாராக விளையாடியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்தார். இருப்பினும் திடீரென அவரை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது.
அந்த வாய்ப்பில் ஓப்பனிங்கில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதனால் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு இஷான் கிசானை பேக்-அப் கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்துள்ளது. அதே சமயம் சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது.
சுப்மன் கில்லுக்கு பதில்:
இந்நிலையில் இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தவறு செய்யாத போதிலும் ஜெய்ஸ்வால் மீண்டும் அணியிலிருந்து விடப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது”
“3 வகையான கிரிக்கெட்டிலும் ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அணிக்குள் வருவதற்கு அவர் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கே தெரியவில்லை. அவரைப் போன்ற மேட்ச் வின்னரை யாரும் வெளியில் விட மாட்டார்கள். கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான வீரர்கள். ஆனால் தற்போதைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றை மதிப்பிட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவுக்கு நான் ஆதரவளிக்கிறேன்”
வெங்சர்க்கார் விமர்சனம்:
“நானாக இருந்திருந்தால் கில்லுக்கு பதிலாக என்னுடைய தேர்வு ஜெய்ஸ்வாலாக இருந்திருப்பார். தன்னுடைய நேரத்தை நிரூபித்துள்ள அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். இன்றைய நவீன கிரிக்கெட்டில் தேவையான அதிரடியான துவக்கத்தை அவரால் கொடுக்க முடியும். ஒரு வகையான ஃபார்மெட்டுக்கு நீங்கள் தேவையில்லை என்ற நிலைமை வரும் போது தன்னம்பிக்கையை இழக்கத் துவங்குவீர்கள்”
இதையும் படிங்க: 9 முறை டாடி சதம்.. சத்தமின்றி டேவிட் வார்னரின் உலக சாதனையை சமன் செய்த ஹிட்மேன் ரோஹித்
“அந்த வகையில் இது ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடும். நீங்கள் களமிறங்கி விளையாடும் போது தான் தன்னம்பிக்கை வரும்” என்று கூறினார். ஐபிஎல் தொடரில் வேகமான அரை சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஜெய்ஸ்வால் 2023 ஆசியப் போட்டிகளில் காலிறுதியில் சதமடித்து இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகியும் விளையாடும் வாய்ப்பைப் பெறாத அவருக்கு இம்முறை மொத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



