அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஆயுஷ் மாத்ரே தலைமையில் விளையாடும் இளம் இந்திய அணி தங்களது லீக் சுற்றில் பாகிஸ்தான், அமீரகம், மலேசியாவை தோற்கடித்தது. அதனால் குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அந்த நிலையில் இந்திய அணி தங்களது அரையிறுதி சுற்றில் குரூப் பி பிரிவில் 2வது இடம் பிடித்த இலங்கையை எதிர்கொண்டது. அப்போட்டி டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கியது. மழையால் மிகவும் தாமதமான அப்போட்டி ஒரு வழியாக இருதரப்புக்கும் தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா அசத்தல்:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 138/8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சமிகா ஹினடிகலா 42, கேப்டன் விமன் தின்சரா 32, செத்மிகா செனிவிராட்னே 30 ரன்களை எடுத்தனர்.
பந்து வீச்சில் அசத்திய இந்திய அண்டர்-19 அணிக்கு அதிகபட்சமாக ஹெனில் பட்டேல், கனிஸ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 7, வைபவ் சூர்யவன்சி 9 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த விகான் மல்கோத்ரா – ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள்.
ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான்:
நன்கு செட்டிலான பின் அதிரடி காட்டிய அந்த ஜோடி அரை சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. தொடர்ந்து அசத்திய அந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 18 ஓவரில் இந்தியாவை 139/2 ரன்களை எடுக்க வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. அதில் ஆரோன் ஜார்ஜ் 58*, விகான் மல்ஹோத்ரா 61* ரன்கள் எடுத்து எளிதாக இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இதையும் படிங்க: 3 மாற்றங்களுடன் கடைசி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
அதனால் ரசித் நிம்சரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த இலங்கையை தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற மற்றொரு செமி ஃபைனலில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா தங்களது பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி துபாயில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



