ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர இளம் துவக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை அந்த அணி வென்ற போது ஒரு முக்கியமான காரணமாகவும் ரஹ்மனுல்லா குர்பாஸ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
நான் பார்த்த பெஸ்ட் கோச் கம்பீர் தான் : ரஹ்மனுல்லா குர்பாஸ்
ஏனெனில் பிலிப் சால்ட் வெளியேறிய பிறகு அந்த இடத்தை பிடித்த குர்பாஸ் குவாலிஃபயர் மற்றும் இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து ரன்களை குவித்து அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதனால் மினி ஏலத்தில் பங்கேற்க இருக்கும் அவரை நிச்சயம் மீண்டும் ஏதாவது ஒரு அணிக்காக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ஒரு பயிற்சியாளர் என்றால் அது கே.கே.ஆர் அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் தான் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என் வாழ்க்கையில் நான் கண்ட சிறந்த பயிற்சியாளர், மனிதர் மற்றும் வழிகாட்டி என அனைத்துமே கம்பீர் தான். அவருடன் இணைந்து செயல்பட்டதை மிகவும் விரும்புகிறேன். அவர் அணியின் சூழலை எளிதாகவும், அழுத்தம் இல்லாமல் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு உருவாக்கியிருந்தார்.
அதனால் தான் எங்களால் கோப்பையை வெல்ல முடிந்தது. கௌதம் கம்பீருக்கு ஒழுக்கத்திற்கு மாறாக எது நடந்தாலும் பிடிக்காது. உடனே கண்டிப்பு காட்டுவார். அதை தவிர்த்து அவர் மிகச்சிறந்த பயிற்சியாளர் என ரஹ்மனுல்லா குர்பாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெளிநாடு மட்டும் பெருசில்ல.. இந்தியாவில் இதை செய்யாத யாரும் கிரேட் பேட்ஸ்மேன் இல்ல.. கவாஸ்கர் சாடல்
ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமான ரஹ்மனுல்லா குர்பாஸ் இதுவரை 80 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி 1 சதம் மற்றும் 11 அரைசதம் என 2067 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர்த்து ஐ.பி.எல் போட்டிகளிலும் 19 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார்.



