டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அமைக்கப்படும் பிட்ச்கள் பல்வேறு சமயங்களில் விமர்சனங்களை சந்திப்பதாக அமைகிறது. பொதுவாக 4 அல்லது 5 நாட்கள் வரை செல்லும் டெஸ்ட் போட்டிகள் மிகவும் தரமானதாகவும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவும் இருக்கும். இருப்பினும் 2 அல்லது இரண்டரை நாட்களில் முடியும் டெஸ்ட் போட்டிகள் ஒரு தலைப்பட்சமாக அமைவது வழக்கமாகும்.
அதற்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக அமைக்கப்படாத பிட்ச்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒரு போட்டி இரண்டரை நாட்களில் முடிந்தால், உடனே பிட்ச் சுழலுக்கு சாதகமாக மோசமாக இருப்பதாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கிறார்கள். அதுவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் ஒரு போட்டி இரண்டரை நாட்களில் முடிந்தால் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருப்பதாக பாராட்டுகிறார்கள்.
சுழலை எதிர்கொள்ள அதிக திறமை வேண்டும்:
எனவே வெளிநாட்டில் அமைக்கப்படும் பிட்ச்கள் தங்கமாகவும் இந்தியாவில் அமைக்கப்படும் பிட்ச்கள் தகரமாகவும் பாவிக்கப்படுவது வழக்கமாகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் வேகத்தை எதிர்கொள்வது போலவே இந்தியாவில் சுழலை எதிர்கொள்வதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு சவால் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதை எதிர்கொள்ள தெரியாத வெளிநாட்டவர்கள் சிறந்த பேட்ஸ்மேனாக முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுழல் பந்துகளை எதிர்கொள்வது வெறும் முன்னோக்கி பின்னோக்கிச் சென்று பேட்டிங் செய்வதைப் பற்றியது மட்டும் கிடையாது. பிட்ச்சில் இறங்கிச்சென்று சுழலை சுமூகமாக்கி பந்தை அட்டாக் செய்வதைப் பற்றியதாகும். அங்கே தான் திறமை வருகிறது. இன்றைய காலத்தில் பேட்ஸ்மேன் வேகப் பந்துகளை இறங்கி சென்று அடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்”
கவாஸ்கர் சாடல்:
“ஆனால் அதை டெக்னிக்கல் நகர்வு என்று சொல்ல முடியாது. அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நகர்வாக இருக்கும். அதை வெற்றிகரமாக விளையாட திறமையைக் காட்டிலும் அதிர்ஷ்டம் தான் முக்கியம். அது உங்களுக்கு எப்போதும் நிலையாக உதவாது. எனவே என்னைப் பொறுத்த வரை வேகத்தை எதிர்கொள்வதைக் காட்டிலும் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாட உங்களுக்கு அதிகமான திறமை மற்றும் ஃபுட்வொர்க் தேவை”
இதையும் படிங்க: இந்தியாவையா இழிவாக பேசுறீங்க.. தெ.ஆ கோச் சுக்ரி மூக்கை உடைக்கும் வகையில் விராட் கோலி பதிலடி
“அதனாலேயே அது போன்ற பிட்ச்களில் நீங்கள் ரன்கள் அடிக்காவிட்டால் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. பொதுவாக மக்கள் வேகத்துக்கு சாதகமான பிட்ச்களில் சதமடிக்கும் பேட்ஸ்மேன்களை உயர்வாக மதிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆசிய கண்டத்தில் சதமடிக்காவிட்டாலும் சிறந்த பேட்ஸ்மேனாகவே கருதப்படுகிறார்கள். உண்மையில் நீங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அடிக்காவிட்டால் சிறந்த பேட்ஸ்மேன் என்ற தகுதியைப் பெற மாட்டீர்கள்” என்று கூறினார்.



