கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை கொல்கத்தாவில் அமைத்து அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. ஏனெனில் கொல்கத்தாவில் அது போன்ற பிட்ச் வேண்டுமென்று தாங்கள் தான் கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இந்நிலையில் கொல்கத்தா டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு பிட்ச்சை மட்டும் குறை சொல்லக்கூடாது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிட்ச்சில் மட்டும் குறையில்லை:
உண்மையில் கடினமான பிட்ச்சில் சவாலான சுழல் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்களிடம் திறமையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடாததே காரணம் என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நம்முடைய நிறைய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் உள்ளூரில் விளையாடும் போது இது போன்ற பிட்ச்சில் விளையாடுவீர்கள் அல்லவா? ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நிறைய அணிகள் ரஞ்சிக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காகப் புள்ளிகளைப் பெற முயற்சிப்பார்கள். அப்படியானால் ரஞ்சிக் கோப்பையிலும் கொஞ்சம் சுழலுக்கு சாதகமான பிட்ச்சுக்களில் நிறைய போட்டிகள் விளையாடப்படும் என்று அர்த்தம்”
கவாஸ்கர் விமர்சனம்:
“ஆனால் நம்முடைய தற்போதைய வீரர்கள் யாரும் அங்கே விளையாடுவதில்லை. உண்மையில் தற்போதைய அணியில் விளையாடும் வீரர்களில் எத்தனை பேர் ரஞ்சிக் கோப்பை தொடருக்கு சென்று விளையாடுகிறார்கள்? யாரும் விளையாடுவதில்லை. கேட்டால் பணிச்சுமை இருப்பதாக சொல்வார்கள். விளையாட விருப்பமில்லை என்பதை பணிச்சுமை என்று அவர்கள் சொல்வார்கள்”
இதையும் படிங்க: பொத்தி வளர்த்த குட்டி மலிங்கா பதிரனாவை.. சிஎஸ்கே கழற்றி விட்டது ஏன்? காசி விஸ்வானதான் விளக்கம்
“ஃபார்மில் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் ரஞ்சிக் கோப்பை விளையாடுவார்கள். இல்லையென்றால் விளையாட மாட்டார்கள். நீங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடத் தயாரானால் அதற்கு உள்ளூரில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுங்கள். அது போன்ற ஆடுகளங்களில் நமக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் இது போன்ற பிட்ச்களில் விளையாடுவதற்கான பயிற்சிகளை எடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.



