வெறும் 124 சேசிங்கில்.. 15 வருடம் கழித்து மண்ணைக் கவ்விய இந்தியா.. தெ.ஆ’விடம் அவமான சாதனை தோல்வி

South Africa
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் போராடி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 189 ரன்கள் எடுத்து அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரிசப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

மண்ணைக் கவ்விய இந்தியா:

அடுத்ததாக 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 55*, கோர்பின் போஸ்க் 25 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

இறுதியில் 124 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சவாலாக மாறிய பிட்ச்சில் மோசமாக விளையாடி 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் 0, ராகுல் 1, துருவ் ஜுரேல் 13, ரிஷப் பண்ட் 2, ரவீந்தர ஜடேஜா 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 31, அக்சர் பட்டேல் 26 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

அவமானத் தோல்வி:

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 2, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றது. அத்துடன் 15 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2010ஆம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை அறிவித்த பிசிசிஐ.. அணிகளின் கையிருப்பு கோடிகள் இதோ

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் சொந்த மண்ணில் மிகவும் குறைந்த (124) இலக்கை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா மோசமான சாதனை தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன் 2024 மும்பை வான்கடே போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 147 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோற்றதே முந்தைய மோசமான சாதனை. அந்த வகையில் இந்தியா சொந்த மண்ணில் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது என்று சொல்லலாம்.

Advertisement