ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ரவிந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பே நடத்தப்பட்ட அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போது மீண்டும் துவங்கிய அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. அதற்கு பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் 2018, 2021, 2023 ஆகிய ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்காற்றினார்.
ஆரம்பித்த இடத்துக்கே:
குறிப்பாக 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கைமீறிய வெற்றியை அவர் சென்னைக்கு பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அந்த சூழ்நிலையில் ராஜஸ்தானுக்கு வரவேண்டுமெனில் தமக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று ஜடேஜா நிபந்தனை விதித்ததாக மற்றொரு செய்தி வெளியானது. அதனால் சாம்சன் – ஜடேஜா ஆகியோரை ராஜஸ்தான் சென்னை அணிகள் டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தம்முடைய ஐபிஎல் பயணத்தைத் துவங்கிய இடத்துக்கே செல்லவிருப்பதை ரவீந்திர ஜடேஜா அறிவார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 2008 – 2011 வரையிலான காலகட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடினார். அங்கே ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கும் ஜடேஜா பங்காற்றினார்.
செல்லும் ஜடேஜா:
தற்போது அதே அணிக்கு மீண்டும் ஜடேஜா திரும்ப உள்ளதாக கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியின் நேரலை வர்ணனையில் சாஸ்திரி தெரிவித்தது பின்வருமாறு. “வெளியில் மக்களிடம் நிறையப் பேச்சுக்கள் காணப்படுகின்றது. ஜடேஜா எங்கே செல்லப் போகிறார் என்பது பற்றி நிறைய சுவாரசியமான பேச்சுக்கள் காணப்படுகிறது. அனேகமாக நாம் எங்கே துவங்கினோமோ அங்கேயே செல்லப் போகிறோம் என்பதை ஜடேஜா அறிவார் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 3வது இடத்தில் சுந்தர்.. 93 வருட வரலாறு காணாத முடிவை எடுத்த இந்திய அணி.. தெ.ஆ தடுமாற்றம்
“மிகவும் தெளிவாக இருக்கும் அவருடைய கவனம் கிரிக்கெட்டில் இருக்கிறது. இந்தியாவில் வெளிப்புறச் சத்தங்கள் இருப்பது வழக்கமாகும். இருப்பினும் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதும், உங்களுடைய பாக்கெட்டுக்கு (கேப்டன்ஷிப்) என்ன வருகிறது என்பதும் தெரியும். தற்போது ஜடேஜா மிகவும் அனுபவமிக்க துப்பாக்கியைப் போன்ற கிரிக்கெட்டராக வளர்ந்துள்ளார். இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக விளையாடிய அவர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார்” என்று கூறியது சிஎஸ்கே ரசிகர்களிடம் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.



