தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அத்தொடரில் டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்காவை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் சுப்மன் கில் தலைமையான இந்திய அணி களமிறங்கியுள்ளது.
அந்த சூழ்நிலையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் 3வது இடத்தில் விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3வது இடத்தில் விளையாடுவார் என்று இந்திய அணி அறிவித்தது.
93 வருட வரலாறு காணாத முடிவு:
அது மட்டுமின்றி அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இப்போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய 6 இடதுகை பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள். இப்படி ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
1932 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா இதுவரை 596 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 596 போட்டிகளில் சிலவற்றில் இந்தியா அதிகபட்சமாக 4 இடது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடியுள்ளது. ஆனால் இந்தப் போட்டியில் தான் முதல் முறையாக 6 இடது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் வித்தியாசமான முடிவை இந்தியா எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்:
அந்த நிலைமையில் ஆட்டத்தைத் துவங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம் 31, ரியன் ரிக்கல்டன் 23 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் அவுட்டானார்கள். கேப்டன் பவுமாவை 3 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த வியான் முல்தாரையும் 24 ரன்னில் காலி செய்தார். மிடில் ஆர்டரில் டோனி டீ ஜோர்சி 24 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்.
இதையும் படிங்க: இந்த தலைமுறையின் சிறந்த வீரர் இவர்தான்.. அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி – ஜெய்ஸ்வால் ஓபன்டாக்
அதனால் இப்பதிவிடும் போது தென்னாபிரிக்கா 149/7 என தடுமாறி வருகிறது. அந்த அணியை 250 ரன்களுக்குள் சுருட்டும் முனைப்புடன் இந்தியா பந்து வீசி வருகிறது. இப்படி பேட்டிங்கில் தடுமாறும் தென்னாபிரிக்க அணிக்கு ரபாடா காயத்தால் விளையாட மாட்டார் என்பது பந்து வீச்சில் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



