ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பையில் நேற்று தீபாவளி தினத்தில் நவிமும்பையில் 21வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 48.4 ஓவரில் போராடி 202 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஹாசினி பேரேரா 85, கேப்டன் சமாரி அட்டப்பட்டு 46 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக சொர்ணா அக்தர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக 203 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு பர்கானா ஹோக் 7, ரூப்யா ஹைதர் 0, சோபனா மோஸ்ட்டரே 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் ஷர்மின் அக்தர் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கேப்டன் நிகர் சுல்தானா நங்கூரமாக விளையாடினார்.
முரட்டுத்தனமான சோக்:
அதனால் 44/3 என தடுமாறிய வங்கதேசம் 176/3 என்ற நல்ல நிலைக்கு வந்து வெற்றியை நெருங்கியது. அதற்கு முக்கிய பங்காற்றிய இருவருமே அரை சதத்தை அடித்து வங்கதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதற்கிடையே சர்மின் அக்தர் காயமடைந்ததால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.
அப்போது மிடில் ஆர்டரில் வந்த சொர்ணா அக்தர் 19 ரன்னில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த ரிட்டு மோனி 7 அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனாலும் மறுபுறம் நிகர் சுல்தானா நங்கூரமாக விளையாடியதால் வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய இலங்கை கேப்டன் சமாரி முதல் பந்திலேயே எதிர்ப்புறம் களமிறங்கியிருந்த ரபேயா கானை 1 ரன்னில் அவுட்டாக்கினார்.
வெளியேறிய வங்கதேசம்:
அடுத்து வந்த நகிதா அக்தர் 0 ரன்னில் ரன் அவுட்டானார். 3வது பந்தில் மறுபுறம் சவாலைக் கொடுத்த சுல்தானாவை 77 ரன்னில் சமாரி அவுட்டாக்கியதால் போட்டியில் பரபரப்பு உண்டானது. அதோடு நிற்காத அவர் 4வது பந்தில் அடுத்து வந்த மருபா அக்தரை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அப்போது சர்மின் அக்தர் களமிறங்கியும் கடைசி 2 பந்துகளில் வங்கதேசம் 1 ரன் மட்டுமே எடுத்தது.
அதனால் வங்கதேசத்தை 50 ஓவரில் 195/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சமாரி 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். மறுபுறம் சர்மின் அக்தர் 64* ரன்கள் எடுத்தும் வங்கதேசம் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
குறிப்பாக கடைசி 30 பந்துகளில் 27 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட வங்கதேசம் மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை விட்டு 20 ரன்களை மட்டுமே அடித்து வெற்றியைக் கோட்டை விட்டது. குறிப்பாக 50வது ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 5வது தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து முதல் அணியாக நாக் அவுட்டாகி வீட்டுக்கு கிளம்பியது. இதைப் பார்க்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்தப் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா செய்த சோக்கை விட வங்கதேசம் முரட்டுத்தனமாக சோக் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.



