வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸை 248 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 270 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அடுத்ததாக ஃபாலோ ஆண் பெற்று மீண்டும் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து 390 ரன்கள் குவித்தது. இறுதியில் 121 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 2 – 0 (2) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒய்ட்வாஸ் செய்து இத்தொடரின் கோப்பையை இந்தியா வென்றது
தொடர்நாயகன் ஜடேஜா:
இத்தொடரை இந்தியா வெல்வதற்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தம்முடைய பவுலிங் பார்ட்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதால் தமக்கு அதிகம் பந்து வீசும் வாய்ப்பு கிடைப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். 8, 9வது இடங்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தம்மை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மேலே விளையாட வைத்தது பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு. “அஸ்வின் ஓய்வுக்கு பின் எனக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணி பேட்டிங், பந்து வீச்சில் அருமையாக செயல்பட்டனர். கடந்த 5 – 6 மாதங்களாக கிரிக்கெட்டின் எம்மாதிரியான பிராண்டை விளையாடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே இது அணியாக எங்களுக்கு நல்ல அறிகுறி. இதை நாங்கள் நீண்டகாலம் தொடர விரும்புகிறோம்”
பிரமோட் செய்த கம்பீர்:
“நான் 6வது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று கௌதம் பாய் சொன்னார். அதனால் இப்போது நான் முறையான பேட்ஸ்மேன் போல சிந்திப்பது எனக்கு வேலை செய்கிறது. கடந்த பல வருடங்களாக நான் 8, 9வது இடங்களில் மட்டுமே பேட்டிங் செய்தேன். எனவே தற்போதைய மனநிலை எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. இப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போது நான் களத்தில் நிறைய நேரம் செலவிட முயற்சி செய்கிறேன்”
இதையும் படிங்க: கடினமான டெல்லி பிட்ச்சில் 8 விக்கெட்ஸ் எடுத்து வெ.இ’ஸை வீழ்த்த இதான் என் திட்டம்.. ஆட்டநாயகன் குல்தீப் பேட்டி
“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் சாதனைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. பேட்டிங், பந்து வீச்சில் கவனம் செலுத்தி என்னுடைய அணியை வெற்றி பெற முயற்சிக்கிறேன். ஒருவேளை அதை சிறப்பாக செய்யாவிட்டால் ஒரு வீரராக என்னுடைய மதிப்பு பிரதிபலிக்காது. எனவே எப்போதும் 100% பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். இது என்னுடைய 3வது தொடர்நாயகன் விருது என்பதால் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார்.



