வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 270 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.
இந்தியா வெற்றி:
அதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தது. அதிகபட்சமாக ஜான் கேம்பல் 115, சாய் ஹோப் 103 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 121 ரன்களை துரத்திய இந்தியாவை கேஎல் ராகுல் 58*, சாய் சுதர்சன் 39 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்கள்.
முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா இதையும் சேர்த்து 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் முதல் போட்டி நடைபெற்ற அகமதாபாத்தை விட டெல்லி பிட்ச் கடினமாக இருந்ததாக குல்தீப் தெரிவித்துள்ளார்.
ஆட்டநாயகன் குல்தீப்:
அங்கே பந்தை அதிகமாக சுழற்றிய போது ஃட்ரிப்ட் (நகர்வு) கிடைத்தது 8 விக்கெட்டுகள் எடுக்க உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியை விட இது மிகவும் வித்தியாசமான பிட்ச். இங்கே நிறைய ஓவர்களை வீசுவது சவாலானது. அங்கே நான் மகிழ்ச்சியுடன் பந்து வீசினேன். இயற்கையாக அங்கே ட்ரிஃப்ட் இல்லை”
இதையும் படிங்க: 23 வருடமாக இந்தியா 10க்கு 10 உலக சாதனை வெற்றி.. வெ.இ அணியை ஒய்ட்வாஷ் செய்து அசத்தல்
“பிட்ச் அதிகமாக காய்ந்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறைய ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் எடுப்பதை நான் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். நீங்கள் நிறைய சுழலை போடும் போது இயற்கையாக ட்ஃரிப்ட் கிடைக்கும். பேட்ஸ்மேன்கள் போல்ட்டாவதை நீங்கள் விரும்புவீர்கள். இப்போட்டியைப் போல முதல் போட்டியில் சில விக்கெட்டுகள் எடுத்ததை நான் விரும்பினேன். இங்கிருந்து சென்று நாங்கள் அடுத்தத் தொடருக்கு தயாராகும். ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பந்து வீசுவது மகிழ்ச்சியானது” என்று கூறினார்.



