ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அவருடைய கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.
அதனால் ஏமாற்றப்பட்ட நக்வி ஆசியக் கோப்பை இந்திய அணிக்கு கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்றார். மறுபுறம் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பை கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணியினர் 45 நிமிடங்கள் காத்திருந்தனர். அப்போது இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இரட்டை வேடம்:
அதற்காக அசராத இந்திய அணியினர் கோப்பையை கையில் வாங்கியது போல் கொண்டாடி நக்வி மற்றும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் ஆசியக் கவுன்சில் தலைவரான நக்வி கோப்பையை வேறு யாரிடமாவது கொடுத்து இந்தியாவிடம் கொடுக்கச் சொல்லாதது சரியா? என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா குலுக்காததே காரணம் என்று அவர் பதிலளித்தார்.
இத்தனைக்கும் ஆசியக் கோப்பை துவங்குவதற்கு முன் நடைபெற்ற கேப்டன்கள் பங்கேற்பு விழாவில் நக்வி மற்றும் தம்மிடம் சூரியகுமார் கைகுலுக்கியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் கேமராவுக்கு முன் கைகுலுக்காத சூரியகுமார் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி சல்மான் பேசியது பின்புறமாறு. “தொடர் துவங்கும் போது சூரியகுமார் தனிப்பட்ட அறையில் என்னுடன் கை குலுக்கினார்”
பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம்:
“தொடர் துவங்குவதற்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் நடுவர்களுடனான சந்திப்பின் போது அவர் எங்களுடன் கை குலுக்கினார். ஆனால் கேமராவுக்கு முன் அவர் எங்களுடன் கை கொடுக்கவில்லை. சூரியகுமார் தமக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது”
இதையும் படிங்க: நியாயமா பாத்தா அசிங்கமான இந்தியாவை தடை பண்ணனும்.. ஆனா ஐசிசி பண்ண மாட்டாங்க.. ரசித் லதீப் விமர்சனம்
“என்னிடம் கைகுலுக்குவது அவரைப் பொறுத்தது. ஆனால் இத்தொடரில் இந்தியா செய்தது ஏமாற்றத்துக்குரியது. அவர்கள் எங்களுடன் கை கொடுக்காமல் எங்களை அவமரியாதை செய்யவில்லை. மாறாக கிரிக்கெட்டுக்கு அவமரியாதை செய்துள்ளனர். அப்படி இந்த தொடரில் நடந்தது மிகவும் மோசமானது. இது ஏதோ ஒரு இடத்தில் நிற்கும் என்று நான் நம்புகிறேன். இது கிரிக்கெட்டுக்கு மோசமானது” என்று கூறினார்.



