ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் செப்டம்பர் 28ஆம் தேதி அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய அணி போராடி 19.4 ஓவரில் 150/5 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை இத்தொடரில் 3வது முறையாக தோற்கடித்த இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24 சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.
பாகிஸ்தான் கீப்பரின் ஸ்லெட்ஜிங்:
முன்னதாக இத்தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் இந்திய அணியை விதவிதமாக வம்பிழுத்து கலாய்த்தனர். அந்த வகையில் இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட்டானால் இந்தியா தோற்கும் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தெரிவித்தனர். அதே போல இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே 5 ரன்னில் அவுட்டானார்.
போதாகுறைக்கு சுப்மன் கில், கேப்டன் சூரியகுமாரும் அவுட்டானதால் 20/3 என ஆரம்பத்திலேயே இந்தியா திண்டாடியது. அதன் காரணமாக சோயப் அக்தர் சொன்னது போல நாம் வெல்லப் போகிறோம் என்று பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது திலக் வர்மா நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
திலக் வர்மாவின் பதிலடி:
அந்த சமயத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் பின்னால் நின்று கொண்டு. “இது மும்பை அணியல்ல. இது ஐபிஎல் கிடையாது” என்று திலக் வர்மா காதில் விழும் வகையில் வேகமாக கத்தி சொல்லி வம்பிழுத்தார். இருப்பினும் அவருடைய ஸ்லெட்ஜிங் வலையில் சிக்காத திலக் வர்மா மிகவும் பொறுமையுடன் அமைதியாக விளையாடி நங்கூரமிட்டார்.
இதையும் படிங்க: ரொம்ப வலிக்குது.. இத்தனை தப்பு பண்ணா எப்படி இந்தியாவை வீழ்த்த முடியும்.. பாகிஸ்தானை சாடிய அக்தர் வேதனை
நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அவர் சாம்சன், துபேவுடன் சேர்ந்து பாகிஸ்தானை பந்தாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். இறுதி வரை அவுட்டாகாத அவர் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 69* (53) ரன்கள் குவித்து பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வெற்றியை தம்மை வம்பிழுத்த முகமது ஹாரிஷ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் முகத்துக்கு முன் திலக் வர்மா வெறித்தனமாக கொண்டாடினர். மேலும் நான் பாகிஸ்தான் போல அல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்து இந்தியாவை வெற்றி பெற வைக்க வந்த உலக தரமான வீரர் என்பதையும் அவர் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.



