ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் தற்போது அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த தொடரினை பொருத்தவரை தனது மோசமான பேட்டிங் பார்மை தொடர்ந்து வரும் சுப்மன் கில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று லீக் ஆட்டங்களில் மொத்தமாகவே 35 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் முதல் போட்டியில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சுப்மன் கில்லுக்கு உதவிய அபிஷேக் சர்மா :
ஆனால் அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களையும், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இப்படி அடுத்தடுத்து சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதால் அவரது பேட்டிங்கின் மீது விமர்சனம் எழுந்துள்ளதோடு சேர்த்து அவரை மிடில் ஆர்டருக்கு தள்ளிவிட்டு மீண்டும் சாம்சனை துவக்க வீரராக கொண்டு வரவேண்டும் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக சுப்மன் கில் இந்த ஆசிய கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக 2 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகப்பெரிய தடுமாற்றமும் இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் சுப்மன் கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இடது கை சுழற்பந்து வீச்சாளராக அவருக்கு எதிராக அபிஷேக் சர்மா பந்துவீசி கில்லுக்கு உதவி செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சுப்மன் கில்லை வலை பயிற்சியில் பேட்டிங் செய்ய விட்டு “உனக்கு எந்த இடத்தில் பந்து வீசினால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது? என்று சொல்”, அந்த இடத்தில் நான் பந்து வீசுகிறேன். அப்போது உன்னுடைய குறை என்ன? என்பதை நன்றாக அறிய முடியும்.
அதன் பின்னர் அதை சரி செய்யலாம் என்று கேட்டு அவருக்கு கடினமாக இருக்கும் இடங்களிலேயே தொடர்ச்சியாக அபிஷேக் சர்மா பந்துவீசி இருக்கிறார். பின்னர் அதையெல்லாம் கவனித்து விட்டு பேட்டிங்கில் உள்ள சிறு சிறு குறைகளையும் சுட்டி காட்டியுள்ளார். அதோடு கூடுதலாக வருண் சக்கரவர்த்தியையும் அழைத்து பந்து வீசவைத்து அவருக்கு எதிராக கில் எவ்வாறு பேட்டிங் செய்கிறார்? என்பதை கவனித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இன்னும் 83 ரன்கள் போதும்.. 12 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ
பின்னர் அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது போன்ற ஆலோசனைகளையும் அபிஷேக் சர்மா சுப்மன் கில்லுக்கு வழங்கியுள்ளார். 14 வயதில் இருந்தே ஒன்றாக விளையாடி வரும் அபிஷேக் மற்றும் கில் ஆகியோருக்கு இடையே இருக்கும் நட்பு இந்த செயலின் மூலம் வெளிப்பட்டுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.



