ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா சூப்பர் 4 முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் அமீரகத்தைத் தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியது. இருப்பினும் அப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது.
சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை. அதே போல போட்டி முடிந்ததும் கை கொடுப்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் ஜென்டில்மேன்களாக களத்தில் நின்றனர்.
அவமானப்பட்டது இந்தியா தான்:
அப்போது பாகிஸ்தானுக்கு கை குலுக்காமல் வெளியேறிய இந்திய அணி தங்களுடைய பெவிலியனை அடைத்தது. அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவை புறக்கணித்து பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கை கொடுக்காமல் வெளியேறிய இந்தியா தான் உண்மையில் அவமானப்பட்டதே தவிர பாகிஸ்தான் கிடையாது என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட அழுத்தத்தைக் கையாளத் தவறிய இந்திய அரசாங்கத்திற்கு அடி பணிந்து ஜென்டில்மேனாக கை கொடுக்காமல் வெளியேறிய இந்திய அணியினர் இந்தியாவை அவமானப்படுத்தியதாக அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பைத் துவங்கிய போது இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களால் சமூக வலைதளங்கள் நிரம்பியிருந்தன”
அப்ரிடி விளாசல்:
“அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிசிசிஐ மற்றும் அவர்களுடைய வீரர்கள் எங்களுடைய அணியுடன் கை குலுக்க வேண்டாமென்று கூறியதில் ஆச்சரியமில்லை. என்னுடைய கருத்துப்படி அதில் எந்த விளையாட்டுணர்வும் இல்லை. அவர்கள் (இந்தியா) மீண்டும் உலகத்தின் முன் அவமானப்பட்டுள்ளார்கள். இந்த விவாகரத்தில் இந்தியா மீது புகார் செய்த எங்களுடைய பாகிஸ்தான் வாரியத் தலைவர் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: கிளப் லெவல் பாகிஸ்தான்.. இந்தியா, ஆஸி லெவலுக்கு இல்ல.. அவங்கள விட பெஸ்ட் மட்டுமே.. அக்தர் வேதனை
“வீரர்கள் நம்முடைய விளையாட்டின் தூதுவர்களாக இருக்க வேண்டுமே தவிர அவமானமாக இருக்கக்க்கூடாது என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இங்கே நான் இந்திய வீரர்களை குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு மேலே இருந்து கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இதே சூரியகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் ஆகா, மோசின் நக்வியுடன் கை குலுக்கினார். ஆனால் களத்தில் ரசிகர்கள் முன்னிலையில் சமூக வலைதளத்தின் அழுத்தத்தை அவர்களால் கையாள முடியவில்லை. அதனால் உலகத்தின் முன் இந்திய வீரர்கள் அவமானமாகி விட்டனர்” என்று கூறினார்.



