ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 13ஆம் தேதி அபுதாபியில் 5வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு முதல் ஓவரிலேயே 6 பந்துகளை எதிர்கொண்ட தன்சிட் ஹசன் 0 ரன்னில் துசாரா வேகத்தில் கடைசி பந்தில் போல்டானார்.
சமீரா வீசிய அடுத்த ஓவரில் மறுபுறம் திணறிய பர்வேஸ் ஹொசைன் 4வது பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து வந்த தவ்ஹீத் ஹ்ரீடாயும் கடைசி 2 பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை. அதனால் முதல் 2 ஓவரின் முடிவில் 12 பந்துகளை எதிர்கொண்ட வங்கதேசம் ரன் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்து 0/2 என ஆரம்பத்திலேயே திணறியது.
சிங்கிள் எடுக்காத பரிதாபம்:
இதன் வாயிலாக (முழு உறுப்பு நாடுகளுக்கிடையே) ஒரு சர்வதேச டி20 போட்டியின் முதல் 2 ஓவரில் 1 ரன் கூட எடுக்காத அணி என்ற ஜிம்பாப்வேவின் மோசமான உலக சாதனையை வங்கதேசம் சமன் செய்தது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணியும் தங்களது முதல் 2 ஓவரில் 1 ரன் கூட எடுக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 8 ரன்னில் அவுட்டான ஹ்ரிடாய்க்கு பின் வந்த மெஹதி ஹசன் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ரிட்டன் தாஸ் 28 ரன்னில் அவுட்டானார். அதனால் 53/5 என திணறிய வங்கதேசம் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கை வெற்றி:
அப்போது மிடில் ஆடரில் பொறுப்புடன் விளையாடிய ஜாகிர் அலி 41* (34), ஷமிம் ஹொசைன் 42* (34) ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுத்தனர். அதனால் தப்பிய வங்கதேசம் 20 ஓவரில் 139/5 ரன்கள் எடுத்தது. இலங்கைக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 2 விக்கட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இலங்கை அதிரடியாக பேட்டிங் செய்து 14.4 ஓவரில் 140/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: பும்ராவுக்கும் அந்த பாக் வீரருக்கும் இடையேயான மோதலை காண ஆவலாக காத்திருக்கிறேன் – இர்பான் பதான் கருத்து
அதனால் தங்களுடைய முதல் போட்டியிலேயே எளிதாக வென்ற இலங்கை ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவங்கியது அதிகபட்சமாக நிசாங்கா 50 (34), கமில் மிஸ்ரா 46* (32) ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



