ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி முதல் போட்டியில் அமீரகத்தை எளிதாக தோற்கடித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்தப் போட்டியில் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அண்டை நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சாதாரணமாகவே களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள்.
இம்முறை 22 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தக் காரணமாக இருந்த பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எனவே அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்க்க வேண்டுமென பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தயாராக உள்ளனர். அதற்கு பதிலடி கொடுத்து வெற்றி பெற இந்திய அணி தயாராகியுள்ளது.
சண்டை வேணாம்:
இந்நிலையில் இம்முறை இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் எல்லை மீறி சண்டை போடக்கூடாது என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான பதற்றமான சூழல் நிலவும் நேரமாகும். இம்முறை பதற்றம் நிலவுகளாலேயே பயம் காணப்படுகிறது. ஆனால் போட்டி நடைபெற்றால் மட்டுமே அந்த பயமும் பதற்றமும் குறையும்”
“ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை முழுமையாக மகிழ்ச்சியுடன் பார்த்து பெரிய இதயத்தை காட்ட வேண்டும். கடந்த காலங்களைப் போல இம்முறையும் மைதானத்தில் சூழ்நிலை வழக்கமானதாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் – இந்தியா ரசிகர்கள் எல்லைக்கோட்டை தாண்டக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் வெற்றிகரமாக தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்”
நண்பர்களாக இருப்போம்:
“ஆக்ரோஷம் தான் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின் அழகாகும். அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதே சாவியாகும். அங்கே மரியாதை எப்போதும் இருக்க வேண்டும். வீரர்கள் கிரிக்கெட்டை எப்போதும் ஜென்டில்மேன் போட்டியாக நினைவு கொள்வார்கள். அதை மனதில் கொண்டாலே வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டி பிரச்சினையின்றி நடைபெறும் என்று சொல்வேன்”
“கடந்த வருடம் ஓமனில் இந்தியா – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய போட்டியில் சுபியன் முஹீம் – அபிஷேக் சர்மா ஆகியோர் மோசமான சண்டையிட்டனர். அங்கே ஆக்ரோஷம் இருக்கலாம். ஆனால் அது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 2010 ஆசியக் கோப்பையில் கௌதம் கம்பீருக்கும் எனக்கும் தவறான புரிதல் ஏற்பட்டது”
இதையும் படிங்க: ரவிச்சந்திரன் அஷ்வினை தாண்டி யுஸ்வேந்திர சாஹலுடன் சாதனையில் இணைந்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ
“இத்தனைக்கும் கென்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாங்கள் நண்பர்களாக இருந்தோம். ஆனால் ஆசியக் கோப்பையில் அவர் ஒரு ஷாட்டை தவற விட்ட போது நான் அவுட் கேட்டேன். அப்போது பந்தை தவற விட்டதற்காக அவர் தம்மிடமே கோபமாக பேசினார். ஆனால் அவர் என்னை ஏதோ சொல்கிறார் என்று நான் தவறாக நினைத்துக்கொண்டதால் தவறான புரிதல் ஏற்பட்டது” என்று கூறினார்.



