ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு அறிமுகமான ஆஸ்திரேலியாவுக்காக அவர் 65 டி20 போட்டிகளில் விளையாடினார். அதில் 79 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கியமாக பங்காற்றினார். கடந்த 2024 ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட ஸ்டார்க் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கியமாக பங்காற்றினார். அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 35 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டி20 கிரிக்கெட்டில் ஓய்வு:
இந்த சூழ்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் விடை பெறுவதாக மிட்சேல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். குறிப்பாக வரும் நவம்பர் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. 2027ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.
அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் 2027 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று அந்த 3 முக்கியமான தொடர்களில் புத்துணர்ச்சியுடன் விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்டார்க் அறிவித்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் போன்ற மற்ற டி20 தொடர்களில் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டார்க் அறிவிப்பு:
இது பற்றி ஸ்டார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு. “எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்னுடைய உயர்ந்த முக்கியத்துவம் இருக்கும். ஆஸ்திரேலியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன். குறிப்பாக 2021 உலகக் கோப்பையை சொல்லலாம். அந்தத் தொடரை நாங்கள் வென்றது மட்டுமின்றி அணியாக மகிழ்ச்சியுடன் விளையாடினோம்”
இதையும் படிங்க: என்னையா அதுக்கு முன்னாடி கழற்றி விடப் பாக்குறீங்க.. அடையாளம் மாறிய ரோஹித்.. பிசிசிஐக்கு பதிலடி
“வருங்காலத்தில் இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ், 2027 உலகக் கோப்பை தொடர் வருகிறது. அந்தத் தொடர்களில் மிகவும் புத்துணர்ச்சியுடன் ஃபிட்டாக விளையாடி என்னுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பதற்கு இதுவே சிறந்த வழி என்று கருதுகிறேன். இது அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு எங்களுடைய பவுலிங் துறை தயாராவதற்கு நல்ல நேரத்தையும் வழங்கும்” என்று கூறினார்.



