இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதும், ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டுள்ளதும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.
ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2024 சயீத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கோப்பையையும் மும்பை அணிக்காக வென்றார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை கேப்டனாக இறுதிப்போட்டி அழைத்துச் சென்றார்.
ரிசர்வ் லிஸ்ட்ல கூட இல்லை:
அவ்வளவு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அவருக்கு 2025 ஆசிய கோப்பையில் இடம் கிடைக்கவில்லை என்பதே பலருடைய கோபமாக இருக்கிறது. சொல்லப்போனால் ஆசிய கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பேக்-அப் வீரர்கள் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆசிய கோப்பை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் பெறாத முடியாத அளவுக்கு ஸ்ரேயாஸ் தகுதியற்றவரா? என தேர்வுக்குழுவை முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இந்த கேள்வியை நான் கேட்க விரும்பினேன். ஸ்ரேயாஸ் எப்படி உங்களுடைய ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இல்லாமல் போனார்?”
நியாயமற்ற தேர்வு:
“ஏனெனில் அவர் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான வலுவான போட்டியாளர். சில நேரங்களில் செலக்சன் மீட்டிங் மற்றும் அதில் பேசப்படும் விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஸ்ரேயாஸ் 20 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியலில் ஏன் இல்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை நியாயப்படுத்தக்கூடிய ஆழமான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை”
இதையும் படிங்க: 198க்கு ஆல் அவுட்.. மஹாராஜ் மாயாஜாலத்தில் ஆஸியை சுருட்டிய தெ.ஆ.. 31 வருட வரலாற்று சாதனை வெற்றி
“நான் 15 பேர் கொண்ட அணியைப் பற்றி பேசவில்லை. 20 பேர் கொண்ட அணியைப் பற்றி பேசுகிறேன். அங்கே ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லாதது அவர் எந்த திட்டங்களிலும் இல்லை என்பதைக் காட்டுகிறது. அது ஏதேனும் விஷயங்கள் சரியாக செல்லவில்லையெனில் கூட நீங்கள் ஸ்ரேயாஸை தேர்ந்தெடுக்க தயாராக இல்லை என்பதைச் சொல்கிறது. உண்மையில் அங்கே ரியன் பராக் அல்லது வேறு வீரருக்கு பதிலாக அவர் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.



