வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த அத்தொடரின் 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.
அத்துடன் 1991க்குப்பின் 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது. மறுபுறம் ஏற்கனவே பாகிஸ்தான் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்றது. கடந்த வருடம் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் தோல்வியைச் சந்தித்தது.
சுயநலமான பேட்ஸ்மேன்கள்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தற்போது 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த வீழ்ச்சிக்கு பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற பேட்ஸ்மேன்கள் சொந்த பேட்டிங் சராசரியை அதிகரிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் விளையாடுவதே காரணம் என்று சோயப் அக்தர் விளாசியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் இப்போதெல்லாம் தார் ரோட் போன்ற பிட்ச்கள் அமைக்கப்படுவது வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். அது போன்ற பிட்ச்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் கிடைக்காது என்று தெரிவிக்கும் அக்தர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு காலத்தில் எங்களிடம் வெளிப்படுத்தும் மற்றும் அதிரடியான திறமை இருந்தது”
சோயப் அக்தர் விளாசல்:
“அதைப் பயன்படுத்தி நாங்கள் சிறந்த வழியில் விளையாடினோம். நாங்கள் வெற்றிக்காக எப்போதும் குறிப்பிட்ட வீரர்களை சார்ந்திருக்கவில்லை. அனைத்து வீரர்களும் வெற்றியில் பங்காற்றுவார்கள். யாரும் தப்பிப்பதற்கான வழியைப் பார்த்ததில்லை. ஆனால் கடந்த 10 – 15 வருடங்களில் சூழ்நிலைகள் மாறி விட்டன. அனைவரும் தங்களுக்காக விளையாடத் துவங்கி விட்டனர். அனைவரும் தங்களுடைய பேட்டிங் சராசரிக்காக விளையாடுகிறார்கள்”
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து தொடர் சிறந்தது என்றாலும்.. அந்த தொடருக்கு ஈடாகாது.. மைக்கேல் ஆதர்டன் பேட்டி
“உண்மையில் நீங்கள் உங்களுடைய நாட்டுக்காக வெற்றி பெறும் நோக்கத்துடன் விளையாட வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகி நகர்ந்தால் திணறுகிறார்கள். நீங்கள் ராவல்பிண்டியில் உள்ளது போன்ற பிட்ச்களை அனைத்துப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது” என்று கூறினார்.



