இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அத்தொடரில் விராட் ரோகித் இல்லாமல் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள். ஆனால் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இளம் இந்திய அணி போராடி தொடரை சமன் செய்தது.
குறிப்பாக முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் 7 கேட்ச்கள் தவற விட்டதால் தோற்ற இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. 3வது போட்டியில் போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பி ட்ரா செய்தது. கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
2005 ஆஷஸ் மாதிரி:
அதனால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் வெற்றிக்காக தங்களுடைய முழுமூச்சுடன் போராடினார்கள். அதே போல ரிஷப் பண்ட், கிறிஸ் ஓக்ஸ் போன்றவர்கள் தங்களது காயத்தைப் பொருட்படுத்தாமல் வெற்றிக்காகப் போராட வந்தனர்.
அதன் காரணமாக அத்தொடர் 2005 ஆஷஸ் தொடரை விட வரலாற்றின் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பலரும் பாராட்டினர். இந்நிலையில் 2025 இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சிறந்தது என்றாலும், 2005 ஆஷஸ் தொடரை விட சிறப்பானது கிடையாது என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
2005 ஆஷஸ் விட சிறந்ததல்ல:
“இத்தொடரின் தரம் 2005 போல இருந்தது என்று நான் நினைக்கவில்லை. 2005 ஆஷஸ் தொடரை விட சிறந்த தொடரை பார்த்ததாகவும் நான் நினைக்கவில்லை. அது வீழ்ச்சியிலிருந்து வந்த ஒரு அணி மற்றும் வளர்ந்து வரும் வீரர்களைக் கொண்ட அணி மோதிய தொடராகும். அதில் அந்த வீரர்கள் தங்களுடைய விளையாட்டின் மேல் சிறந்து விளங்கினார்கள்”
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் இந்தியா மோதக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.. அந்த தோல்வி ரசிகர்களை பைத்தியமாக்கிடும்.. பசித் அலி
“ஆனால் இது (2025) 2005 ஆஷஸ் தொடருக்குப் பின் நடந்த சிறந்தத் தொடராகும். 2023 ஆஷஸ் தொடரும் சிறப்பானது. ஆனால் இந்த இந்தியா – இங்கிலாந்து தொடர் 2005 ஆஷஸ் தொடருக்குப்பின் மிகவும் சிறந்தது என்று நான் சொல்வேன். ஏனெனில் அதில் கிறிஸ் ஓக்ஸ், ரிஷப் பண்ட் காயத்துடன் வந்தது போன்ற நாடகமான தருணங்கள் அரங்கேறின. நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் அரங்கேறின” என்று கூறினார்.



