இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இந்த தொடரின் 10 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்த அவர் 41 ரன்கள் சராசரியுடன் 411 ரன்கள் குவித்து இருந்தார். அதில் இரண்டு சதம் மற்றும் பல்வேறு அரை சதங்களும் அடங்கும்.
டாப் 5-ல் இடம்பிடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
இந்த தொடரில் புதிய பாட்னராக கே.எல் ராகுலுடன் இணைந்து அவர் நல்ல துவக்கத்தை அமைத்துக் கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணி வெற்றி பெற்ற கடைசி ஓவல் டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 118 ரன்கள் குவித்திருந்தார்.
அவர் அடித்த இந்த அதிரடியான சதத்தின் மூலம் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டவும், அந்த போட்டியில் வெற்றி பெறவும் முடிந்தது. அந்த அளவிற்கு அவரது அந்த இன்னிங்ஸ் அசத்தலாக இருந்தது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் வெளியான டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் தற்போது முதல் முறையாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 5-க்குள் நுழைந்துள்ளார். இந்த தரவரிசை பட்டியலில் 792 புள்ளிகளுடன் ஜெய்ஸ்வால் டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்13-வது இடத்தினை பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் 75 ரன்கள் சராசரியுடன் 754 ரன்கள் குவித்திருந்தாலும் அவரால் டாப் 10-க்குள் இன்னும் இடம்பெற முடியவில்லை. அதே வேளையில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 768 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே டீமுக்கு நோ.. சஞ்சு சாம்சன் எங்கேயேயும் போக மாட்டாரு.. முற்றுப்புள்ளி வைத்த – ராஜஸ்தான் ராயல்ஸ்
அவர்களை தவிர்த்து டாப் 10-ல் வேறு எந்த பேட்ஸ்மனும் இடம்பெறவில்லை. அதேவேளையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த இங்கிலாந்து தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



