இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டர் நகரில் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து 669 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடும் இந்தியாவுக்கு சுதர்சன் ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ஜடேஜா, பும்ரா மேலே விமர்சனம்:
அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே விழுந்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 87*, கேப்டன் கில் 78* ரன்கள் அடித்து கை கொடுத்தனர். அதன் காரணமாக 4வது நாளின் முடிவில் 174/2 ரன்கள் எடுத்துள்ள இந்தியா தோல்வியைத் தவிர்க்க நங்கூரமாக விளையாட வேண்டியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் முறையாக 100 ரன்கள் வழங்கி தடுமாற்றமாக பவுலிங் செய்தார்.
அதனால் 90 போட்டிகளில் அசத்திய போதெல்லாம் உலகில் நம்பர் ஒன் பவுலர் என பும்ராவை பாராட்டியவர்கள் இன்று விமர்சிப்பதைப் பார்க்க முடிகிறது. அதே போல பென் ஸ்டோக்ஸ் 2017க்குப்பின் 8 ஆண்டுகள் கழித்து 5 விக்கெட்டுகளும், 2023க்குப்பின் 2 வருடங்கள் கழித்து சதத்தையும் அடித்துள்ளார். அதனால் ஜடேஜாவை விட அவர் பன்மடங்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
கபில் தேவ் பதிலடி:
அவர்களுக்கு ஜாம்பவான் கபில் தேவ் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “நான் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை. ஸ்டோக்ஸ் நல்ல ஆல் ரவுண்டர். ஆனால் இப்போதும் ஜடேஜா முன்னிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன். ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். இங்கே அனைவரும் வித்தியாசமானவர்கள். காலம் மாறியதைப் போலவே மனிதர்களின் உடலும் வித்தியாசமானது”
இதையும் படிங்க: காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் 5வது நாளில்.. கில் – ராகுல் போல இந்தியாவுக்கு விளையாடுவாரா? கோட்டக் பதில்
“ஆம் ஜஸ்ப்ரித் பும்ரா நம்முடைய ஒரு டாப் வேகப்பந்து வீச்சாளர். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் வித்தியாசமாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு நிலைப்பது மிகவும் கடினம். எனவே அவர் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இதுவரை இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடும் அவருக்கு தலை வணங்குகிறேன்” என்று கூறினார். இங்கே ஒரு போட்டியில் தடுமாறியதும் விமர்சிப்பவர்கள் ஜடேஜா, பும்ரா தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் மற்றும் பவுலராக இருப்பதை நினைவுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



