ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு சில தரமான அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் கிடைத்தனர். அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். குஜராத்துக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சத்தத்தை அடித்த அவர் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதனால் இன்னும் சில வருடங்களுக்குள் சூரியவன்சி இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இளம் வீரர் என்ற சச்சின் சாதனையை உடைப்பார் என்று மைக்கேல் வாகன் போன்ற சில முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். இந்நிலையில் சூரியவன்சி திறமையானவர் என்றாலும் அதற்காக இணையற்ற சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் வேங்கடபதி ராஜு தெரிவித்துள்ளார்.
நோ கம்பேரிசன்:
ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலேயே அனைத்து வகையான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்து அசத்தியதாக அவர் கூறியுள்ளார். எனவே சச்சின் போலவே அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தும் வரை சூர்யவன்சிக்கு அவசரப்பட்டு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் ராஜு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஆம் சூர்யவன்சி நிறைய நேரத்தை எடுத்துக் கொள்வார். அவர் அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டியவர்களில் ஒருவர். அதே போல உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக விளையாட வேண்டும். அவருக்கு 4 நாட்களைக் கொண்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும். திறமையின் அடிப்படையில் அவரால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் என்ன செய்ய முடியும் நாம் பார்த்துள்ளோம்”
சச்சின் எப்போவும் கிரேட்:
“இவை அனைத்தும் சீராக செயல்படுவதைப் பொறுத்தது. நாம் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒருவரைப் பற்றி பேசுகிறோம் அல்லவா? முதலில் அவர் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி சதத்தை அடைத்தார். இராணிக் கோப்பையில் விளையாடி 100 அடித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடி 100 அடித்தார். அவை அனைத்துமே 3, 4, 5 நாட்கள் நடைபெறக்கூடிய போட்டிகளாகும்”
இதையும் படிங்க: 2012இல் 5 தோல்வியால் தோனியை தூக்க நினச்ச செலக்டர்.. 7 ஜாம்பவான்களின் கேரியரை அழிச்சாங்க.. யோக்ராஜ் பேட்டி
“அந்த வகையில் திறமை இருக்கிறது என்று தெரியும் ஒருவருக்கு போதுமான நேரத்தைக் கொடுத்து தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்புகளில் தொடர்ச்சியாக அசத்துவதற்கு போதுமானவராக இருந்தால் ஏன் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வரக்கூடாது” என்று கூறினார்.



