ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருட்டியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாபிரிக்கா வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்தனர். 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
27 வருட இதய வலி:
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பௌலிங் செய்த தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 52, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் சதத்தை அடித்து 136, கேப்டன் பவுமா 66 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
அதனால் 1998க்குப்பின் 27 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது. இந்நிலையில் 27 வருடங்களாக ஐசிசி தொடரில் பல இதய வலிகளை சந்தித்த தென்னாபிரிக்கா இந்தக் கோப்பையை வெல்ல விடாமுயற்சியும் உழைப்புமே காரணம் என்று கேப்டன் பவுமா பெருமிதம் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பவுமா பெருமிதம்:
“கடந்த சில நாட்கள் ஸ்பெஷலாக இருந்தது. இங்கே எங்களுக்கு கிடைத்த ஆதரவு தென்னாப்பிரிக்காவில் இருப்பதைப் போன்ற உணர்வை கொடுத்தது. இது எங்களுடைய அணிக்கும், சொந்த நாட்டில் இருப்பவர்களுக்கும் ஸ்பெஷல் தருணம். இதில் சில நாட்கள் நாங்கள் மூழ்கி இருப்போம். எனர்ஜியைக் கொண்டிருந்த நாங்கள் ஒரு அணியாக இதை வெல்ல விரும்பினோம்”
“அதற்காக நாங்கள் கதவுகளைத் தட்டிய நாங்கள் இதய வலி, ஏமாற்றங்கள் போன்றவற்றை கடந்த காலங்களில் விளையாடிய வீரர்களிடமும் பார்த்தோம். தற்போது சூரியன் எங்கள் பக்கம் இருக்கிறது. இது பல வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். ரபாடா அற்புதமான பிளேயர் சில வருடங்களில் அவர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இருப்பார். நிறைய சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் சிறப்பாக விளையாடினார்”
இதையும் படிங்க: 27 வருடம்.. ஆஸியை சாய்த்த தெ.ஆ.. சோக்கர் பட்டத்தை உடைத்து டெஸ்ட் சாம்பியனாக சரித்திர சாதனை வெற்றி
“மார்க்ரம் நம்ப முடியாத வகையில் விளையாடினார். சாதனைகள் முக்கியம். ஆனால் நாங்கள் போராட்டத்தையே பார்க்கிறோம். அது அவரிடம் இருந்தது. நாங்கள் இங்கே வந்த போது எங்கள் மேலே சந்தேகப்பட்டவர்கள் இருந்தனர். நாங்கள் பலவீனமான அணிகளை வீழ்த்தி விட்டு வந்ததாக எங்களை கருதினார்கள். இது அவர்களுக்கானது. இந்த வெற்றியை எங்களுடைய நாட்டில் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.



