ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற அத்தொடரில் லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. வரலாற்றில் அவ்விரு அணிகளும் அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.
எனவே இம்முறை சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது. இந்நிலையில் குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பைக்கு எதிராக அடித்த 87* ரன்கள் தம்முடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபைனலில் கோப்பையை வெல்லும் வரை தம்முடைய வேலை முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரிப்பீட்டாகும்ன்னு சொன்னேன்:
அத்துடன் இதே அகமதாபாத் மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதம் 2024 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை நடைபெற்றது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி ரஜத் படிதார் தலைமையிலான மத்திய பிரதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதே போல 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஃரிப்பீட்டாகும் என்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடம் சொன்னதாகவும் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஃபைனலுக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அழுத்தமான சூழலில் அணிக்காகப் போட்டியை வெல்வது உலகிலேயே சிறந்த உணர்வாக இருக்கும். ஆம் அதை என்னுடைய மிகச்சிறந்த இன்னிங்ஸாக நான் மதிப்பிடுவேன். அதிகமாக சிந்திக்காமல் முடிந்த வரை சூழலுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை நான் விரும்புகிறேன்”
ரிப்பீட் செய்வாரா:
“சேசிங் என்றால் பிட்ச் எப்படி இருக்கிறது, எந்த பவுலர்கள் வருவார்கள், ரன்ரேட் ஆகியவற்றைப் பார்த்து நான் விளையாடுவேன். அதற்குத் தகுந்தார் போல் திட்டங்களை வகுத்து போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்புவேன். இவை அனைத்தும் போட்டி நாளில் வேலை செய்ய வேண்டும். அது இன்னும் முடியவில்லை. எங்களுக்கு நாளை இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. பாதி வேலை மட்டுமே முடிந்துள்ளது என்பதே என்னுடைய மனநிலை மற்றும் அணுகுமுறையாகும்”
இதையும் படிங்க: இன்னும் 86 ரன்கள் தேவை.. ஐ.பி.எல் வரலாற்றில் சரித்திரம் படைக்க விராட் கோலிக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு – விவரம் இதோ
“ஆம் சயீத் முஷ்டாக் அலி கோப்பை பற்றிய உணர்வு எனக்கு வருகிறது. ரஜத்தை சந்தித்த போது முஷ்டாக் அலி கோப்பை ஃபைனல் மீண்டும் வந்துள்ளது, நாம் மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறோம் என்று அவரிடம் சொன்னேன்” எனக் கூறினார். இதற்கிடையே ஃபைனலில் மழை பெய்வதற்கும் வாய்ப்பு இருப்பது எக்ஸ்ட்ரா சுவாரசியத்தை ஏற்படுத்த உள்ளது.



