இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மே 30ஆம் தேதி கேன்டர்பரி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ஆரம்பத்திலேயே 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 (55) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதனால் 51/2 என இந்தியா ஏ தடுமாறிய போது கருண் நாயர் – சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து நங்கூரத்தை போட்டனர்.
என்னையா கழற்றி விட்டீங்க:
ஆரம்பத்தில் விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக மிகவும் மெதுவாக விளையாடி அந்த ஜோடி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தங்களை மாற்றிக் மாற்றிக் கொண்டது. நேரம் செல்ல செல்ல மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த ஜோடி இங்கிலாந்து பவுலர்களை எதிர்கொண்டு அரை சதத்தை அடித்தது. தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே சதத்தை நெருங்கினார்கள்.
ஆனால் அப்போது சர்பராஸ் கான் 13 பௌண்டரியுடன் 92 (119) ரன்னில் ஜோஸ் ஹல் வேகத்தில் தம்முடைய விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் சென்றார். கடந்த 2024 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் 2 அரை சதத்தை அடித்து அசத்தினார். அதற்கடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் தனி ஒருவனாக 150 ரன்கள் குவித்த அவர் இந்தியாவில் வெற்றிக்கு போராடினார்.
கருண் கம்பேக்:
இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்க தவறிய சர்பராஸ் கானை இங்கிலாந்தில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கண்ணோட்டத்துடன் பிசிசிஐ கழற்றி விட்டனர். ஆனால் இப்போட்டியில் 92 ரன்கள் குவித்த அவர் என்னையா கழற்றி விட்டீங்க? என்று தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய கருண் நாயர் சதத்தை அடித்தார்.
இதையும் படிங்க: 228 ரன்ஸ்.. 300 சிக்ஸ்.. குஜராத்தை வெளுத்த மும்பை.. பேர்ஸ்டோ அதிரடி.. ஹிட்மேன் ரோஹித் 2 சாதனைகள்
2016ஆம் ஆண்டு அறிமுகமாகி இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முச்சதத்தை அடித்த அவர் அதன் பின் பெரிய ரன்கள் குவிக்க தவறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூரில் கடுமையாக போராடி 9 வருடங்கள் கழித்து இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். அந்த வாய்ப்பில் தற்போது சதத்தை அடித்து க்ளாஸ் கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் இப்பதிவிடும் போது இந்தியா ஏ 302/3 ரன்களை எடுத்து அசத்தி வருகிறது.



