ஐபிஎல் 2025 கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற அத்தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான், ஹைதராபாத், லக்னோ, நடப்புச் சாம்பியன் கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்தன. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அந்த 4 அணிகள் கோப்பையை வெல்வதற்காக தயாராகி வருகின்றன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதிர்ஷ்டமான 2வது இடம்:
2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் விளையாடிய பெங்களூரு அணி முக்கியமான நேரங்களில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டு வருகிறது. குறிப்பாக 2016 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் பட்டையை கிளப்பிய ஆர்சிபி இறுதிப்போட்டியில் சொதப்பி ஹைதராபாத்திடம் தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்து வருகிறது.
இருப்பினும் இம்முறை சிறப்பாக விளையாடும் ஆர்சிபி வெளியூர் மண்ணில் விளையாடிய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகள் பெற்று வரலாறு காணாத சாதனை படைத்தது. அதனால் இம்முறை கண்டிப்பாக தங்களுடைய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு 2வது இடத்தைப் பிடித்து குவாலிபயர் 1 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
கோப்பை வெல்லுமா:
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2011ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்த அணிகள் ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. 3வது இடத்தைப் பிடித்த அணிகளில் 2016 தொடரில் ஹைதராபாத் மட்டும் அரிதாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. ஆனால் 2வது இடத்தைப் பிடித்த அணிகள் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 8 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளன.
இதையும் படிங்க: 2005 ஃபிளைட்ல முதல் முறையா தோனி பாத்தேன்.. இப்போவும் அப்படி இருந்தா பேசத் தயங்குவேன்.. ஜடேஜா பேட்டி
முதலிடத்தை பிடித்த அணிகள் 5 கோப்பைகளை வென்றுள்ளன. இதன் அடிப்படையில் 2011 முதல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் அணிகள் அதிக முறை கோப்பைகளை வென்று வருவது தெரிகிறது. அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு இம்முறை தங்களுக்கு கிடைத்துள்ளதால் கோப்பையை ஆர்சிபி வெல்லப்போவதாக பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இந்த அதிர்ஷ்டமிக்க வாய்ப்பை பயன்படுத்தி ஆர்சிபி கோப்பையை வெல்லுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



