ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி லக்னோவில் 61வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு இளம் வீரர் அபிஷேக் சர்மா 59 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அவரை அவுட்டாக்கிய லக்னோ வீரர் திக்வேஷ் ரதி வழக்கம் போல தம்முடைய கையில் நோட்புக்கில் எழுதுவது போல எழுதிக் கொண்டாடினார். ஆனால் அதை அவர் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த அபிஷேக் சர்மாவை பார்த்து சில தேவையற்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டே கோபமாக கொண்டாடினார். அதனால் கோபமடைந்த அபிஷேக் ஷர்மா மீண்டும் வந்து அவரிடம் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்டார்.
தடை பெற்ற திக்வேஷ்:
அப்போது உள்ளே புகுந்த நடுவர்கள் மேற்கொண்டு சண்டையை வளர விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் திக்வேஷ் ரதி அடுத்த ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது இந்த வருடம் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்தார்.
அப்போது பிரியான்ஸ் ஆர்யா அருகே சென்று உரசிக்கொண்டு அவர் தனது கையில் எழுதி விக்கெட்டை கொண்டாடினார். அதற்கு முதல் முறையாக பிசிசிஐ 1 கருப்பு புள்ளி மற்றும் 25% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்தது. அப்போதும் அடங்காத அவர் அடுத்ததாக மும்பைக்கு எதிரான போட்டியில் மீண்டும் அதேப்போல கொண்டாடியதால் 50% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்த பிசிசிஐ 2 கருப்பு புள்ளிகளை கொடுத்திருந்தது.
பிசிசிஐ தண்டனை:
தற்போது ஹைதராபாத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அத்து மீறி கொண்டாடியதால் அவருக்கு மீண்டும் 50% சம்பளம் அபராதம் மற்றும் 2 கருப்பு புள்ளிகளை பிசிசிஐ தண்டனையாக கொடுத்துள்ளது. அந்த வகையில் திக்வேஷ் ரதி 1, 2, 2 என உச்ச வரம்பான 5 புள்ளிகளைத் தாண்டியுள்ளார். அதனால் அவருக்கு அடிப்படை விதிமுறைப்படி அடுத்த ஒரு போட்டியில் விளையாடுவதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த தொடரில் நாங்கள் சந்தித்துள்ள மோசமான நிலைக்கு காரணம் இதுதான் – ராகுல் டிராவிட் அப்செட்
இதைப் பார்க்கும் ரசிகர்கள் குறைவான சம்பளத்திற்கு விளையாடும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இனிமேலாவது திருந்தி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுங்கள் என்று ரசிகர்கள் அவரை சாடுகின்றனர். இது போக அவருடன் சண்டைக்கு சென்ற அபிஷேக் ஷர்மாவுக்கு பிசிசிஐ இப்போட்டியின் 25% சம்பளம் அபராதம் மற்றும் 1 கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



