ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதிலும் மே 3ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னையை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை 2 முறை தோற்கடித்து பெங்களூரு சாதனை படைத்தது.
அதையும் சேர்த்து 8 வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 62 (33) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். பொதுவாகவே நங்கூரமாக விளையாடக்கூடிய அவர் இந்தப் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடி 187.88 ஸ்ட்ரைக் ரேட்டில் சென்னை பவுலர்களை வெளுத்து வாங்கினார்.
அம்பின்னு நினைக்காதீங்க:
அத்துடன் 5 பவுண்டரி 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும் டி20 போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் (பெங்களூரு) அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்தார். இந்நிலையில் கடந்தப் போட்டியில் 51 (47) ரன்கள் அடித்தது போல விராட் கோலியால் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
அதற்காக விராட் கோலியால் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாது என்று விமர்சகர்கள் நினைப்பதாகவும் பதான் தெரிவித்துள்ளார். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிராக 187 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய விராட் கோலியால் அடித்து நொறுக்கவும் முடியும் என்று பதான் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டது பின்வருமாறு.
பதான் பதிலடி:
“கடந்தப் போட்டியில் 100 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு நெருக்கமாக விளையாடியது போல் விராட் கோலியால் ஒரு இன்னிங்ஸை நங்கூரமிட முடியும். அதே சமயம் இன்று 187 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது போல அவரால் ஆக்ரோசமாகவும் விளையாட முடியும். அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியன். அவர் தான் விராட் கோலி” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அந்த பையன் நெருப்பு மாதிரி ஆடுறான்.. அவன் தான் இந்திய அணியின் எதிர்காலம்.. சி.எஸ்.கே வீரரை பாராட்டிய – சூரியகுமார்
இதிலிருந்து விராட் கோலியை அம்பி என்று நினைக்காதீர்கள். அவருக்குள் அந்நியன் இருக்கிறார் என்பதற்கு இந்தப் போட்டியே சான்று என இர்பான் பதான் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இது போக இந்த வருடம் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



