இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஒன்பது போட்டிகளில் விளையாடி ஏழு தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. இந்த தொடரில் வெறும் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணியானது நான்கு புள்ளிகளுடன் 10-வது இடத்தில் இருக்கும் வேளையில் இனி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சி.எஸ்.கே அணி இனிமேல் இதை செய்தால் போதும் : ஆர்.பி சிங்
இந்நிலையில் சிஎஸ்கே அணியானது ஏப்ரல் 30-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம் என்கிற வேளையில் சிஎஸ்கே அணியின் பெருமைக்காக அவர்கள் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய நிலையில் என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணியால் எந்த ஒரு மேஜிக்கையும் நிகழ்த்த முடியாது. அவர்கள் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாது என்று நினைக்கிறேன். எனவே தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்கள் தங்களது அணியின் பெருமைக்காக விளையாட வேண்டும்.
சி.எஸ்.கே என்றால் எப்படிப்பட்ட அணி என்பதை எதிரணிகளுக்கு காட்ட வேண்டும். எனவே தற்போதுள்ள வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் அணிக்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ளவற்றை தோனி பார்த்துக் கொள்வார். என்னை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணியை விட சிஎஸ்கே அணி தான் வலிமையான அணி.
சிஎஸ்கே அணியில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்த சீசனில் நூர் அகமது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று கடந்த போட்டியில் பிரேவிஸ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். அவர் இனிவரும் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுவார் என ஆர்.பி சிங் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 2026இல் விளையாடுவீர்களா?.. அடுத்த மேட்ச்க்கு வருவனான்னே தெரியல.. சிஎஸ்கே மாற்றங்கள் பற்றி தோனி பேட்டி
கடந்த 2023-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



