ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் 34வது போட்டி நடைபெற்றது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 95-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக டிம் டேவிட் 50*, கேப்டன் ரஜத் படிதார் 23 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய பஞ்சாப் சிறப்பாக பேட்டிங் செய்து 12.1 ஓவரில் 98-5 ரன்கள் எடுத்து தங்களுடைய 5வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 33* ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபுறம் பெங்களூரு அணி தங்களுடைய சொந்த மண்ணில் மூன்றாவது தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் பெங்களூரு 33-5 என திணறியது.
கமான் சென்ஸ் இல்லை:
அப்போது பெங்களூரு அணி எப்படியாவது 49 ரன்கள் தாண்டி விட வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் வேண்டுதலாக இருந்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் விக்கெட்டுகள் சரியும் போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 – 120 ரன்கள் எடுத்திருந்தால் பெங்களூரு வெற்றிக்கு போராடி இருக்கலாம் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆனால் அந்தக் காமன்சென்ஸ் இல்லாத பெங்களூரு பேட்ஸ்மேன்கள் குருட்டுத்தனமான ஷாட்டுகளை அடித்து விக்கெட் இழந்ததாக சேவாக் சாடியுள்ளார்.
அதே போல பெங்களூரு மைதானத்தில் இந்த வருடம் விளையாடிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதை மாற்றுவதற்கு கேப்டன் ரஜத் படிதார் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை என்றும் சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
சேவாக் விமர்சனம்:
“பெங்களூரு அணி மிகவும் மோசமாக பேட்டிங் செய்தது. அவர்கள் அனைவருமே பொறுப்பற்ற ஷாட்டுகளை அடித்து விக்கெட்டை இழந்தார்கள். அவர்களில் ஒரு பேட்ஸ்மேன் கூட நல்ல பந்தில் விக்கெட்டை இழக்கவில்லை. ஒருவேளை அவர்களுடைய கையில் விக்கெட்டுகள் இருந்திருந்தால் 14 ஓவரில் 110 – 120 ரன்கள் எடுத்திருக்கலாம். அது வெற்றிக்கு போராடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கும்”
இதையும் படிங்க: எனக்கு இப்படி ஒரு மரியாதையை குடுத்ததுக்கு நன்றி.. என் கனவில் கூட இதை நெனச்சி பாக்கல – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி
“ஆனால் அவர்களுடைய ஒரு பேட்ஸ்மேன் கூட இந்த எளிமையான காமன் சென்ஸை (பொது அறிவு) பயன்படுத்தியதாக தெரியவில்லை. ரஜத் படிதார் ஏதேனும் தீர்வுடன் வரவேண்டும். அவர்கள் சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லை. அவர்களுடைய பவுலர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். ஆனால் ஏன் சின்னசாமி மைதானத்தில் அவர்களது பேட்டிங் தொடர்ச்சியாக சொதப்புகிறது? சொந்த மண்ணில் நீங்கள் தொடர்ச்சியாக இப்படி தடுமாறினால் விஷயங்கள் சரியாக இல்லை என்று அர்த்தம். இதை யார் சரி செய்வார்?” என்று கூறினார்.



