ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 25வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி சென்னைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணிக்கு டேவோன் கான்வே 12, ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 16/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு நிதானமாக விளையாட முயற்சித்த விஜய் சங்கர் 29, ராகுல் திரிபாதி 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். அடுத்ததாக வந்த அஸ்வின் 1, ஜடேஜா 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை உண்டாக்கினார். அப்போது இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா டக் அவுட்டாகி கதையை முடித்தார்.
சரிந்த சென்னை:
அடுத்ததாக வந்த கேப்டன் தோனியும் 1 ரன்னில் சுனில் நரேன் சுழலில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் சென்னை கண்டிப்பாக 100 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சிவம் துபே வேறு வழியின்றி நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எதிர்புறம் பேட்ஸ்மேன் இல்லாததால் சிங்கிள் கூட எடுக்காமல் டபுள் மற்றும் பவுண்டரி மட்டுமே எடுத்த அவர் பரிதாபமாக விளையாடியது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அதே போல விளையாடிய துபே கடைசி பந்தில் பவுண்டரி அடித்து 31* (29) ரன்கள் குவித்தார். அதனால் 100 ரன்களை தாண்டி ஆல் அவுட் மானத்தையும் காப்பாற்றிக் கொண்ட சென்னை 20 ஓவரில் 103-9 ரன்கள் எடுத்தது.
மோசமான சாதனை:
இதன் வாயிலாக சென்னை அணி தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் மும்பைக்கு எதிராக சென்னை 109 ரன்கள் ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை. இது போக ஏற்கனவே இந்த வருடம் சேப்பாக்கத்தில் பெங்களூரு, டெல்லிக்கு எதிராக 17, 15 வருடங்கள் கழித்து சென்னை தோற்றது.
இதையும் படிங்க: விமர்சனம் செய்ங்க ஆனா இந்தியாவின் கேப்டன் தோனிக்கு மரியாதை குறைவா இதை செய்யாதீங்க.. இர்பான் பதான் சாடல்
அதனால் சேப்பாக்கம் கோட்டை தகர்த்து நொறுக்கப்பட்டது என்றே சொல்லலாம். மறுபுறம் அந்தளவுக்கு அபாரமாக பவுலிங் செய்த அணிக்கு சுனில் நரேன் 3, ஹர்சித் ராணா 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்கள். இதை அடுத்து கொல்கத்தா எளிதான வெற்றியை துரத்தி வருகிறது.



