ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் 5 போட்டிகளில் 4 தோல்வி 1 வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் திண்டாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இம்முறையும் அந்த அணி இப்படி தடுமாற்றமாக விளையாடுவது மும்பை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக மும்பை 5 கோப்பைகளை வெல்வதற்கு ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார்.
இருப்பினும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்ட மும்பை நிர்வாகம் கடந்த வருடம் அவரை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அந்த முடிவுக்கு மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்தது வேறு கதை. இந்தியாவுக்காக கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா 20, 50 ஓவர் அல்லது டெஸ்ட் ஆகிய அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் முழுமையாக விளையாடுகிறார்.
அனுபவம் முக்கியம்:
ஆனால் ரோஹித் சர்மா ஃபிட்டாக இல்லை என்ற கருதும் மும்பை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடரில் அவரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்துகிறது. மற்ற சமயங்களில் அவரை கூல்ட்ரிங்க்ஸ் தூக்க வைப்பது ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனை இப்படியா அவமானப் படுத்துவீர்கள் என்று ஏற்கனவே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை அணியின் இந்தத் தோல்விகளுக்கு ரோஹித் சர்மா இம்பேக்ட் வீரராக பயன்படுத்தப்படுவதே காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். ஏனெனில் இம்பேக்ட் வீரராக இருப்பதால் பவுலிங் செய்யும் போது ரோகித் சர்மா தனது பொன்னான அனுபவங்களை ஹர்திக் பாண்டியாவுக்கு பகிர்ந்து வெற்றிகளில் பங்காற்ற முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பங்கர் கருத்து:
“ரோஹித் சர்மா களத்தில் இல்லாதது லீடர்ஷிப் கோணத்தில் மும்பை அணிக்கு வலியைக் கொடுக்கிறது என்று நினைக்கிறேன். அவர் களத்தில் இருந்தால் பாண்டியாவுக்கு சரியான உள்ளீடுகளை வழங்குவார். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவர் களத்தில் இருப்பது அற்புதமான மதிப்பைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: தோனி, கோலி செஞ்சதை விட திக்வேஷ் செய்வதில் என்ன தப்பு? அபராதம் எதுக்கு? சைமன் டௌல் ஆதரவு
“ரோகித் சர்மா ஒன்றுக்கும் மேற்பட்ட ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்டவர். அப்படிப்பட்ட அவர் களத்தில் அனைத்து நேரங்களிலும் இருந்தால் முக்கியமான சமயத்தில் போட்டியை மாற்றக்கூடிய ஆலோசனைகளை கொடுக்கக்கூடும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மும்பை தங்களது அடுத்த போட்டியில் டெல்லியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.



